நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயன் பட இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமியை திருமணம் செய்ததாக பரவிய வதந்திக்கு ஒரே ஒரு பதிவில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட நடிகை சாய் பல்லவி, மலையாள படமான ப்ரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து அறிமுகமானார். மலையாளத்தில் அறிமுகமான இந்த நடிகை தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அதிக மேக்கப் இல்லாமல், ஆடம்பர உடையில்லாமல், எதார்த்தமாக இருக்கும் இந்த நடிகைக்கு ரசிகர்கள் ஏராளம். பட விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் புடவை அணிவதையே விருப்பமாக தேர்ந்தெடுப்பார் சாய் பல்லவி.
என்னதான் சினிமாவில் இவ்வளவு ஆண்டுகள் இருந்தாலும் பெரிதாக வதந்திகளுள் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துவந்த மலர் டீச்சர் சமீபத்தில் ஒரு வதந்திக்குள் சிக்கினார். சிவகார்த்திகேயனின் 21வது படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சாய் பல்லவி படத்தின் பூஜையின்போது, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு அருகில் நிற்க, பூஜை என்பதால் இருவரின் கழுத்திலும் மாலை இருந்தது. பூஜை புகைப்படத்தை வழக்கம்போல திரித்து இயக்குனரை மணந்த சாய் பல்லவி என நெட்டில் பரப்பினார்கள். அவரின் இந்த திரிக்கப்பட்ட புகைப்படம் வைரலாக ஆனது.
இந்நிலையில், தற்போது, அவரை பற்றி சுழன்று வரும் வதந்திக்கு நறுக்கென ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார் நடிகை சாய் பல்லவி. அதில், “நிஜமாகவே என்னை பற்றி வரும் வதந்திகளை நான் பொருட்படுத்துவதில்லை. அனால், என்னோடு சேர்த்து என் குடும்பம் போன்ற நண்பர் இந்த வதந்தியில் இணைகிறார் என்றால் இதை பற்றி நான் பேசியே ஆகவேண்டும். எனது படத்தின் பூஜையின்போது எடுக்கப்பட்ட ஒரு போட்டோவை வேணுமென்றே கிராப் செய்து கேவலமான நோக்கத்தோடு பொய்யான அக்கவுண்டுகள் பகிர்ந்துவருகிறது. எனது திரைப்படம் குறித்த ஆனந்தமான தகவல்களை பகிரலாம் என நினைக்கும்போது, வேலையற்றவர்களின் இந்த வேலை எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. இம்மாதிரியான அசௌகரியமான விஷயத்தை செய்வது முற்றிலும் கேவலமானது” என பதிவிட்டிருக்கிறார்.