‘தேவர் மகன்’, ‘சின்ன கவுண்டர்’ படங்கள் வந்தபோது விவாதங்களே எழவில்லை: பா.ரஞ்சித்!

“சாதியை நாங்கள் பாராட்டவில்லை உங்களால் தான் இதெல்லாம் நிகழ்கிறது என சொல்கிறார்களே. 90களில் வந்த ‘சின்ன கவுண்டர்’, ‘தேவர் மகன்’ படங்கள் வந்தபோது ஏன் இந்தக் கேள்வி எழுப்பபடவில்லை” என இயக்குநர் பா.ரஞ்சித் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் ‘பிகே ரோஸி திரைப்பட விழா’ நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாவது:-

திராவிட இயக்கம் ஆட்சியைப் பிடித்த பிறகு, சினிமா கமர்ஷியலுக்கு மாறுகிறது. அதன்பிறகு ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் வருகிறார்கள். பாலுமகேந்திரா, பாரதிராஜா உள்ளே வருகிறார்கள். மாற்றம் நிகழ்கிறது.
பாலுமகேந்திரா படங்கள் அழகியலைப் பேசியது. பாரதிராஜா படங்கள் எளிய மக்களின் வாழ்வியலை பேசியது. 90களில் சினிமா மொத்தமாக மாறிவிட்டது. அப்போது தான் ‘சின்ன கவுண்டர்’, ‘தேவர் மகன்’ உள்ளிட்ட ஏராளமான சாதியப் படங்கள் வெளியாகின. சாதிகளை வெளிப்படையாகப் பேசிய படங்கள் வந்தன. அதில் தலித் மக்களின் கதாபாத்திரங்களை அவர்கள் எப்படி பயன்படுத்தினார்கள் என்பதைப் பார்த்தால் புரியும். சமூக சீர்திருத்தத்தை பேசிய தமிழ் சினிமாவில் அதற்கு முரணான விஷயங்கள் நடைபெற்றன. சினிமாவின் முகம் மாறி, சாதியப் பெருமைகள் பேசப்பட்டன. அவை விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டதா? என்பதே கேள்வி.

ஆரோக்கியமான சினிமாவில் ஏன் தலித் சாதி மனநிலையில் படம் எடுக்குறீர்கள்? அதனால் தான் சாதி புத்தியே வருகிறது. சாதியை நாங்கள் பாராட்டவில்லை உங்களால் தான் இதெல்லாம் வருகிறது என சொல்கிறார்களே 90களில் வந்த ‘சின்ன கவுண்டர்’, ‘தேவர் மகன்’ உள்ளிட்ட படங்கள் வரும்போது ஏன் கேள்வி எழுப்பப்படவில்லை.

‘பராசக்தி’ போன்ற அரசியல் எழுச்சியை ஏற்படுத்திய தமிழ் சினிமாவில் அதற்கு முரணான சாதிய பெருமை பேசும் படங்கள் வரும்போது விவாதங்கள் எழவில்லை. யாரும் அதனை விமர்சிக்கவில்லை. பொது தளத்தில் அது எதிரொலிக்கப்படவே இல்லை. எந்தக் கேள்வியும் எழுப்பபடாமல் சாதாரணமாக நடந்தது. இவ்வாறு அவர் ஆதங்கத்துடன் பேசினார்.