அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்: சுந்தர்.சி!

இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர்.சி. 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இப்போது அரண்மனை 4 படத்தை இயக்கியிருக்கிறார். படமானது இந்த மாதம் வெளியாகவிருக்கிறது. இதற்கு முன்பு வெளியான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களுமே டீசண்ட்டான வரவேற்பை பெற்றவை. இந்தச் சூழலில் சுந்தர் சி பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முறைமாமன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர்.சி. அந்தப் படம் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியானது. முதல் படமே மெகா ஹிட்டானது. முக்கியமாக படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் அனைத்தும் இன்றுவரை அனைவரையும் சிரிக்க வைப்பவை. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னைத்தேடி, உனக்காக எல்லாம் உனக்காக என அவர் இயக்கிய படங்கள் மெகா ஹிட்டடித்தன.

சுந்தர்.சியின் இயக்கத்தில் வெளியான படங்களில் காமெடி காட்சிகள் சிரிப்பு சரவெடியை பற்ற வைப்பவை. வின்னர், உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம் என அவர் இயக்கிய படங்களில் சுந்தர் எழுதிய காமெடி காட்சிகள் இன்றுவரை சிரிப்பு வரவைக்கக்கூடியவை. தொடர்ந்து காமெடி ஜானரில் படங்கள் இயக்கி வந்தவர் கமல் ஹாசன் எழுதிய அன்பே சிவம் படத்தை இயக்கி கவனம் ஈர்த்தார். ஆனால் அந்தப் படம் இயக்கியது பெரும் தவறு என்றும்; அப்போது யாரும் அந்தப் படத்தை கொண்டாடவில்லை என்றும் தொடர்ந்து கூறிவருகிறார் சுந்தர்.சி.

இடையே ஹீரோவாகவும் நடிக்க தொடங்கிய அவர் கலகலப்பு படத்தை இயக்கி தனக்குள் இருக்கும் இயக்குநர் இன்னும் இறக்கவில்லை என்பதை நிரூபித்தார். பிறகு அரண்மனை படத்தை இயக்கினார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்களை இயக்கினார். அந்தப் படங்களும் டீசண்ட்டான வரவேற்பை பெற்றன. தற்போது அவர் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தை இயக்கியிருக்கிறார். படம் இந்த மாதம் 26ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் சுந்தர்.சி சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஒரு வேலை விஷயமாக மும்பைக்கு சென்றிருந்தேன். அப்போது விமானத்தில் 13 அல்லது 14 வயதுடைய சிறுமி ஒருவர் பெற்றோருடன் பயணித்தார். அப்போது அவர் என்னிடம், அரண்மனை படத்தின் அடுத்த பாகம் எப்போது எடுப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அதேபோல் விமானத்தில் ஏறுவதற்காக பஸ்ஸில் சென்றேன். அப்போதும் ஒரு சிறுமி நான் அரண்மனை படத்தின் மிகப்பெரிய ரசிகை. அரண்மனை அடுத்த பாகத்தை எப்போ ஆரம்பிக்கிறீர்கள் என்று கேட்டார். அந்தச் சமயத்தில்தான் நான் எந்தப் படம் பண்ணுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். இப்படி இரண்டு சம்பவங்கள் நடந்ததை அடுத்து அந்த சிறுமியிடம், அரண்மனை 4 எடுக்கப்போகிறேன். உனக்காகத்தான் இந்தப் படம் எடுக்கிறேன் என்று எல்லோரிடமும் சொல் என்றேன். அந்த சிறுமிகளுக்கு எனது நன்றி” என்றார்.