சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் உட்பட 3 பேருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்துள்ள நிலையில், இந்த முடிவானது யூதர்களுக்கு எதிரானது என்று நெதன்யாகு கூறியுள்ளார்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் – ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் போர் நடைபெற்று வருகிறது. இவ்விசயத்தில் இஸ்ரேல் ராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக பல்வேறு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) நேற்று பிறப்பித்த கைது வாரன்ட் உத்தரவில், ‘போர் குற்றங்களில் ஈடுபட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெயிஃப் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது. இவர்கள் மீது மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் சுமத்தப்படுகிறது. இவர்கள் மீது பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை வேண்டுமென்றே வழிநடத்தியது. காசா மக்கள் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத பொருள் சப்ளை செய்ததை தடுத்தது போன்ற குற்றங்கள் சுமத்தப்படுகிறது.
ஏற்கனவே கடந்த மே மாதத்தில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட், ஹமாஸ் ராணுவ தளபதி டெய்ஃப் மற்றும் மூத்த ஹமாஸ் தலைவர்களான இஸ்மாயில் ஹனியே மற்றும் யாஹ்யா சின்வார் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்திருந்தது. இருப்பினும், ஹனியே மற்றும் சின்வார் ஆகியோர் கொல்லப்பட்டதால் அவர்களுக்கு எதிரான கைது வாரன்டை நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
இந்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரன்ட் குறித்து இஸ்ரேல் பிரதமர் அளித்த பதிலில், ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவானது யூதர்களுக்கு விரோதமானது. யூத விரோத தீர்ப்பு; நவீன டிரேஃபஸ் விசாரணை போன்றது. பிரான்ஸ் நீதிபதி தலைமையிலான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீண்டும் ஒரு தவறைச் செய்துவிட்டது. நீதிமன்றம் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. சாமானியக் குடிமக்கள் எந்தப் பிரச்னையையும் சந்திக்காமல் இருக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம்’ என்றார்.
கடந்த 1894ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் ராணுவத்தில் பணியாற்றிய யூத ராணுவ அதிகாரிக்கு எதிராக நடத்தப்பட்ட வழக்கில், அவருக்கு எதிராக பிரான்ஸ் ராணுவ ரகசிய ஆவணங்களை கசியவிட்டதாக புகார் எழுந்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் நிரபராதி எனக் கண்டறியப்பட்டு, மீண்டும் பிரான்ஸ் நாட்டின் ராணுவ அதிகாரியானார். அதனைதான் நெதன்யாகு, நவீன டிரேஃபஸ் விசாரணை குறிப்பிட்டுள்ளார்.