ரஷ்ய -உக்ரைன் போரில் அமெரிக்காவின் உளவுத்துறை!

உக்ரைன் நாட்டில் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், இந்த போரில் அமெரிக்க உளவுத்துறையின் உதவி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. அங்கு சில மாதங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வந்த போதிலும், ரஷ்யா முழு வீச்சில் போரைத் தொடங்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த போர் சுமார் 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் போர் உக்ரைன் போர் தொடங்கிய உடனேயே மறுபுறம் அமைதி பேச்சுவார்த்தையும் தொடங்கி நடைபெற்றது. முதலில் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன், துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன் பின்னர், சில காலம் சண்டை நடைபெறாமல் இருந்த போதிலும், மீண்டும் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கிவிட்டது. ரஷ்யா அத்துமீறி நடத்தும் இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைத்து நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகப்படியான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளது. அதேபோல உக்ரைனுக்கு ஆதரவாகவும் தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அதேநேரம் உக்ரைன் நாட்டிற்கு உலக நாடுகள் வழங்கும் உதவிகள் போதுமானதாக இல்லை என்றே உக்ரைன் அதிபர் கூறி வருகிறார்.

இதனிடையே போரில் ரஷ்ய ஜெனரல்கள் பலரைக் கொல்ல உக்ரைன் ராணுவத்திற்கு உளவுத்துறையை உதவிகளை அமெரிக்கா வழங்கி வருவதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா படைகளின் நடமாட்டம், இருப்பிடங்கள் உள்ளிட்ட தகவல்களை உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்கா வழங்கி வருகிறது. ரஷ்யா ராணுவத்தின் நடமாடும் மொபைல் ராணுவத் தலைமையகம் பற்றிய விவரங்களையும் அமெரிக்கா தொடர்ச்சியாக உக்ரைன் நாட்டிற்கு வழங்கி வருகிறது. இத்துடன் தனது உளவு அமைப்புகளிடம் இருந்து கிடைக்கும் தகவல்களைக் கொண்டே ரஷ்யப் படைகளைக் குறித்து வைத்து உக்ரைன் ராணுவம் துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. துல்லிய தாக்குதல்கள் காரணமாக ரஷ்ய மூத்த அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுநாள் வரை உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்கி வந்ததாகக் கருதப்பட்ட நிலையில், உளவுத் துறை தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக வெளியாகி உள்ள இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை இது தொடர்பாக உடனடியாக பதிலளிக்கவில்லை. இந்த போர் தொடங்கியது முதலே சுமார் 12 ரஷ்ய ஜெனரல்களை உக்ரைன் படைகள் கொன்றுள்ளனர். அமெரிக்க உளவுத்துறை அளித்த தகவல்கள் உதவியுடன் எத்தனை தளபதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டனர். அதேநேரம் வலுவான ரஷ்யா படைகளைச் சமாளிக்க அமெரிக்காவின் தகவல்கள் பெரியளவில் உதவி இருக்கும் என்றே அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர்களாக உள்ள போலந்து மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்த பால்டிக் கடல் பகுதியில், அணு ஆற்றலை கொண்ட கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஸ்கேண்டர் வரை ஏவுகணைகளை அனுப்பி பயிற்சி மேற்கொள்வதில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டனர். இதற்காக விமான தளங்கள், பாதுகாக்கப்பட்ட உட்கட்டமைப்புகள், ராணுவ சாதனம் மற்றும் முகாம்கள் ஆகியவற்றை போலியாக உருவாக்கி, அவற்றை இலக்குகளாக கொண்டு ஒன்று முதல் பல்வேறு முறை மின்னணு முறையிலான தாக்குதல்களை தொடுத்து பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சியில், ரஷ்யா வீரர்கள் தாக்குதல் நடத்திய பின்னர் தங்களது இருப்பிடங்களை மாற்றி கொண்டனர். எதிரிகளின் பதிலடியில் இருந்து தப்பிப்பதற்காக இந்த முறையை அவர்கள் கையாண்டுள்ளனர். இதே போன்று கதிரியக்கம் மற்றும் ரசாயன வீச்சு ஆகிய தாக்குதல்களுக்கும் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டனர்.

சமீப நாட்களாக அணு ஆயுத கிடங்குகளை திறக்க வேண்டும் என்று ரஷ்ய தொலைக்காட்சி சேனல்களில் கூறப்பட்டு வரும் செய்திகளை நாங்கள் கேட்கிறோம் என ரஷ்யா செய்தி நிறுவன ஆசிரியர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டிமிட்ரி முரடோவ் கூறியுள்ளார்.

இதனால், ரஷ்யா தனது போரின் ஒரு பகுதியாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான சாத்தியம் பற்றி உலக நாடுகளிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு வேளை அணு ஆயுதங்களை பயன்படுத்தி போர் நடத்தப்பட்டால் அதனால், மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் சூழல் ஏற்படும்.