காஷ்மீருக்குள் ஊடுருவ தயார் நிலையில் 200 பயங்கரவாதிகள்!

காஷ்மீருக்குள் ஊடுருவ 200 பயங்கரவாதிகள் தயார்நிலையில் இருப்பதாக வடக்கு பிராந்திய ராணுவ தளபதி கூறினார்.

வடக்கு பிராந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவிவேதி நேற்று காஷ்மீரின் உத்தம்பூர் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு எல்லையில் போர் நிறுத்த மீறல்கள் குறைந்துள்ளன. கடந்த 13 மாதங்களில் 3 விதிமீறல்களே நடந்துள்ளன. அதே சமயத்தில், எல்லைக்கு அப்பால் பயங்கரவாத கட்டமைப்புகள் அப்படியே இருக்கின்றன. பெரிய அளவிலான 6 பயங்கரவாத முகாம்களும், சிறிய அளவிலான 29 பயங்கரவாத முகாம்களும் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு ராணுவ நிலைகளுக்கு அருகே தற்காலிக பயிற்சி முகாம்கள் இயங்கி வருகின்றன. பயங்கரவாத கட்டமைப்புகள் நீடிப்பதற்கு பாகிஸ்தான் ராணுவமே காரணம். அதன் ஒத்துழைப்பை மறுக்க முடியாது.

எல்லைக்கு அப்பால் காஷ்மீருக்குள் ஊடுருவ தயார்நிலையில் 200 பயங்கரவாதிகள் உள்ளனர். அதே சமயத்தில் ஊடுருவலை தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகள் வழியாக மட்டும் ஊடுருவுவது இல்லை. ஜம்மு, பஞ்சாப், நேபாளம் ஆகிய இடங்களில் உள்ள சர்வதேச எல்லை வழியாகவும் ஊடுருவி வருகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு, கூடிய விரைவில் அழிப்பதுதான் எங்கள் நோக்கம்.

காஷ்மீரில் தற்போது 40 முதல் 50 உள்ளூர் பயங்கரவாதிகள் உள்ளனர். வெளிநாட்டு பயங்கரவாதிகள் எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் வெளிநாட்டு பயங்கரவாதிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 21 வெளிநாட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட உள்ளூர் பயங்கரவாதிகள் போதிய பயிற்சி இன்றி, வெறும் கைத்துப்பாக்கியுடன் இருந்தனர். வளர் இளம் பருவத்தினரை மூளைச்சலவை செய்து பயங்கரவாத இயக்கத்தில் சேர்ப்பது கவலை அளிக்கிறது. அதனால், அவர்களை மூளைச்சலவையில் இருந்து விடுவிக்க முயன்று வருகிறோம்.

காஷ்மீரில் சாலைகளில் ராணுவத்தினர் தேவையில்லை என்ற நாள் வரும்போது, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் தானாகவே போய்விடும். கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அமர்நாத் யாத்திரைக்கு வருபவர்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் பயங்கரவாத தாக்குதல் நடக்காத அளவுக்கு கண்காணித்து வருகிறோம். கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.