மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்கிறது திமுக அரசு: வானதி சீனிவாசன்!

திமுக அரசை பொறுத்தவரை மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து வருகிறது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மே 7-ம் தேதியான இன்றுடன் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைகிறது. இந்நிலையில் திமுக அரசின் ஓராண்டு கால செயல்பாடுகள், முதலமைச்சரின் நடவடிக்கைகள் பற்றி வானதி சீனிவாசன் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரம்ப நாட்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். கொரோனா பரவல் தடுப்பு பணிகளில் மத்திய அரசுடன் இணைந்து அவர் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. இதேபோல் வெற்று புகழாரங்கள் வேண்டாம் என தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் அவர் கடிவாளம் போட்டு வைத்திருப்பது நல்ல விஷயமாக பார்க்கிறேன். இதேபோல் நல்ல ஆட்சி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பு ஸ்டாலினிடம் இருக்கிறது. இதையும் பாராட்ட வேண்டும். ஆனால் இப்போது அதுவும் குறிப்பாக கடந்த மூன்று மாதங்களாக முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருந்து அதிகாரிகளும், அமைச்சர்களும் விலகி செயல்படத் தொடங்கியிருக்கிறார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வெளியில் எல்லாம் எதிரிகள் இல்லை. திமுகவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளே போதும் ஸ்டாலின் பெயரை கெடுப்பதற்கு. அந்தளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் இருப்பதை காண முடிகிறது. திமுக கவுன்சிலர்கள் பல இடங்களில் அராஜகங்கள் செய்யத் தொடங்கிவிட்டனர். இதேபோல் அமைச்சர்கள் சிலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களை வைத்து பேரம் பேசுவது உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இதையெல்லாம் போகிற போக்கில் நான் சொல்லவில்லை, நானே நேரடியாக பார்த்தும், என்னிடத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையிலும் சொல்கிறேன். அமைச்சர்கள் பணம் சம்பாதிக்க தொடங்கிவிட்டார்கள் என்ற தகவல் எங்களுக்கு உறுதியாக வந்துகொண்டிருக்கிறது.

இன்னொரு விஷயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன், அதாவது மண் அள்ளுவது உள்ளிட்ட எந்த தொழிலாக இருந்தாலும் என்ன தான் அரசாங்கம் அனுமதி கிடைத்திருந்தாலும் கூட உள்ளூர் திமுக நிர்வாகிகளிடம் அனுமதி பெற வேண்டிய அவலமும் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளதாக தொடர்ச்சியாக எங்களுக்கு புகார்கல் வந்த வண்ணம் உள்ளன. அதனால் நல் ஆட்சியை கொடுக்க முனைப்பு காட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு அவர்களை கட்டுப்படுத்த வேண்டும்.

எப்போது பார்த்தாலும் மத்திய அரசை குற்றஞ்சாட்டி மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்யும் போக்கை திமுக அரசு கடைபிடித்து வருகிறது. இது நல் ஆட்சிக்கு அழகல்ல. இந்த வருடம் மட்டும் 24% கூடுதலாக தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி கொடுத்துள்ளது. அதேபோல் கொரோனா தடுப்பூசி தொடங்கி எல்லா விவகாரங்களிலும் எவ்வித பாரபட்சமும் காட்டாமல் தமிழகத்திற்கு மத்திய அரசு உதவி வருகிறது. தமிழகத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அதனை உடனே திசை திருப்பும் வகையில் மத்திய அரசை அதில் தொடர்புபடுத்தி பிரதமருக்கு எதிராக தீர்மானம் போட்டு உள்ளூர் பிரச்சனையை மறைக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார். இது அவரிடம் உள்ள பெரிய குறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.