டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி!

டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக் கோரிய மனுவை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவருடைய டுவிட்டர் உள்பட தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக, 70,000க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது. டுவிட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டிவிட்டரை பயன்படுத்த டொனால்ட் டிரம்பிற்கு ஒரு போதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட அவரது டுவிட்டர் கணக்கை மீட்டெடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக் கோரிய மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி, டிரம்ப் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் டுவிட்டரை பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.

இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரரும் ஆன எலான் மஸ்க்,விரைவில் டுவிட்டரை கையகப்படுத்த உள்ளார். இந்நிலையில், இது குறித்து ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனர் பில்கேட்சிடம் கேட்டபோது, அவர், ‘எலான் மஸ்க் டுவிட்டரை மோசமாக்கி விடுவார்’ என தெரிவித்து உள்ளார். சுதந்திரமான பேச்சு குறித்து பேசும் எலான் மஸ்க், கொரோனா தடுப்பூசி குறித்து பரவி வரும் தவறான தகவல்களை எவ்வாறு தடுப்பார் என, கூட்டம் ஒன்றில், பில்கேட்சிடம் கேள்வி
எழுப்பப்பட்டது. அப்போது அவர் இத்தகைய பதிலை கூறிஉள்ளார்.