இராமநாதபுரம் இளைய மன்னர் குமரன் சேதுபதி காலமானார்!

இராமநாதபுரம் இளைய மன்னரும் ராமேஸ்வரம் கோயில் தக்காருமான ராஜா என். குமரன் சேதுபதி இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

காலமான என். குமரன் சேதுபதி, ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் ஆவார். இவர் ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் குழு தலைவராக இருந்துள்ளார். ராமநாதபுரம் அரண்மனையில் குடும்பத்துடன் வசித்து வந்த என். குமரன் சேதுபதி இன்று மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என். குமரன் சேதுபதி, ராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட கால்பந்து சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர்.

தென் தமிழகத்தில் பிரிக்கப்படாத பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதியை ஆண்டவர்கள் சேதுபதிகள், வங்கக்கரையின் அதிபதியாய் முதலில் போகளூரையும், பின் ராமநாதபுரத்தையும் தலைநகராக்கி ஆட்சி புரிந்தவர்கள். சேதுக் கரைக்கு அதிபதிகளாகத் திகழ்ந்ததால் சேதுபதிகள் என அழைக்கப்பட்டனர்.