அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல முயற்சி

ஈராக் மீது போர் தொடுத்ததற்காக, அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல சதி திட்டம் தீட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்ஜ் புஷ்ஷை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய ஈராக்கை சேர்ந்த ஷாகிப் அகமது ஷாகிப்(52) என்பவர் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது நீதிமன்றத்தில், குடிபெயர்வோர் செய்யும் குற்றம், அமெரிக்க முன்னாள் அதிகாரி மற்றும் தலைவரை கொல்ல முயற்சி மற்றும் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பார்வையாளர் விசாவிற்குள் ஷாகிப் அமெரிக்கா வந்தார். அவரது விசா காலம் காலாவதியானதை தொடர்ந்து 2021ம் ஆண்டு அடைக்கலம் கோரினார். கொலம்பஸ் பகுதியில் வசித்த ஷாகிப், எப்பிஐ., அமைப்புக்கு ரகசிய தகவல் அளிக்கும் நபரை தொடர்பு கொண்டு, ஜார்ஜ் புஷ்ஷை கொலை செய்யும் சதி திட்டம் குறித்து விளக்கி உள்ளார். ஈராக் மீது போர் தொடுத்ததற்கும், அதனால் பல ஈராக்கியர்கள் இறந்தது மற்றும் அவர்கள் அகதிகளாக வெளியேறிய காரணங்களால் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தான், அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு பகர் அல் பாக்தாதியின் உறவினர் எனவும் கூறியதுடன், சதி திட்டத்தை நிறைவேற்ற மெக்சிகோ எல்லை வழியாக மேலும் 4 ஈராக்கியர்களை சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். அதில் இரண்டு பேர், ஈராக் உளவுப்பிரிவில் பணியாற்றியவர்கள். மற்றவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனக்கூறியதுடன், டல்லாஸ், டெக்சாஸ் பகுதிகளில் ஜார்ஜ் புஷ் தொடர்புடைய இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ததுடன், கொலை செய்வதற்கு தேவையான ஆயுதங்கள், சீரூடைகள் மற்றும் ஆயுதங்கள் வாங்குவது குறித்தும் விவாதித்துள்ளார்.