புடினுக்கு தீவிர புற்றுநோய், 3 வருஷம்தான் உயிருடன் இருப்பார்?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புடினுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவரது செயல்பாடுகளிலிருந்து மெல்ல மெல்ல தெரியவந்தது. பொது இடங்களில் தோன்றிய போதும் அவரது முகம் வாட்டமாகவே இருந்தது. ரஷ்யாவில் வெற்றி விழா அணிவகுப்பின் போது முன்னாள் ராணுவ அதிகாரிகளுடன் கம்பீரமற்று புடின் அமர்ந்திருந்தார். மேலும் கைகளை கட்டிக் கொண்டு கால்களில் கம்பளி போர்த்தியிருந்தார். இதனால் அவர் புற்றுநோய் அல்லது பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடினுக்கு புற்றுநோய் தீவிரமடைந்துள்ளதாக உளவுத் துறை அதிகாரி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு சேவையில் பணியாற்றி அதிலிருந்து வெளியேறிய போரிஸ் கார்பிச்கோவ் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். ரஷ்ய உளவாளியிடமிருந்து போரிஸுக்கு அனுப்பப்பட்ட ரகசிய செய்தி வெளியே கசிந்துள்ளது. அந்த தகவல் குறித்து போரிஸ் கூறுகையில் புடினுக்கு புற்றுநோய் தீவிரமடைந்துள்ளது. புடின் தலைவலியால அவதிப்படுவதாகவும் டிவியில் தோன்றும் போது அவர் பேச வேண்டியவற்றை ஒரு பேப்பரில் பெரிய எழுத்துகளில் எழுதி கொடுக்கும்படி கூறுகிறார். அவரது கண் பார்வை மோசமடைந்துள்ளது. எனினும் அவர் கண்ணாடி அணியவில்லை. கண்ணாடி அணிவதையே அவர் பலவீனமாக கருதுகிறார்.

ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரது கால்கள் அவ்வப்போது ஆடுகின்றன. அது கேமராவில் கூட பதிவாகியிருந்தது. அவரை சூழ்ந்து சிலர் எப்போதும் இருப்பார்கள். அவர்கள் தன்னுடன் இருப்பதையும் புடின் தவிர்த்து வருகிறார். புடினுக்கு அவ்வப்போது கோபம் ஏற்படுகிறது. அவர் இன்னும் 2 முதல் 3 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் வாழ்வார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் இந்த தகவல்களை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கெய் லாவ்ரோவ் முற்றிலும் மறுக்கிறார். புடினுக்கு அக்டோபர் மாதம் வந்தால் 70 வயது ஆகும். அவர் ஆண்டுதோறும் தனது பிறந்த நாளின் போது பொதுமக்கள் முன்பு தோன்றி வாழ்த்துகளை பெறுகிறார். அவரை திரையில் பாருங்கள், அவரது பேச்சுகளை கேளுங்கள். அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருக்கிறதா என்பதை பிறகு சொல்லுங்கள் என்றார் லாவ்ரோவ்.