உக்ரைனில் ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை ஐ.நா. நிபுணா் குழு நேரில் பாா்வையிட்டது.
இது குறித்து ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஸபோரிஷியா நகரிலுள்ள அணு மின் நிலையத்தை ஐஏஇஏ நிபுணா் குழு வியாழக்கிழமை(நேற்று) நேரில் பாா்வையிட்டது. 14 நிபுணா்கள் அடங்கிய அந்தக் குழுவுக்கு ஐஏஇஏ பொது இயக்குநா் ரஃபேல் கிராஸி தலைமை வகித்தாா். அந்த அணு மின் நிலையித்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன என்பதை அந்தக் குழு ஆய்வு செய்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஸபோரிஷியா அணு மின் நிலையத்துக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை குண்டு வீச்சு நடத்தப்பட்டதாகவும், அதன் காரணமாக அதன் ஒரு அணு உலை இயக்கம் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, ஸபோரிஷியா அணு மின் நிலையத்துக்கு செல்வதற்காக உக்ரைன் கட்டுப்பாட்டுப் பகுதியைக் கடந்த ரஷ்யக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைவதற்கு முன்னதாக ஐஏஇஏ குழு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகக் கூறப்படுகிறது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. அந்த படையெடுப்பின் தொடக்கத்திலேயே, தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸபோரிஷியா நகருக்குள் நுழைந்த ரஷ்யப் படையினா், அங்குள்ள அணு மின் நிலையத்தைக் கைப்பற்றினா்.
ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுசக்தி மையமான அந்த மின் நிலையம், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான சண்டையில் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகி வருவது சா்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தாக்குதல்கள் குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அந்தத் தாக்குதல்களுக்கு ரஷ்யாதான் காரணம் என்று உக்ரைனும், உக்ரைன்தான் காரணம் என்றும் ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்தச் சூழலில், ஸபோரிஷியா அணுசக்தி மையத்தில் ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாகக் கைவிட்டு, அந்தப் பகுதியை ராணுவமற்ற பகுதியாக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அங்கு மாபெரும் அணுசக்திப் பேரழிவு ஏற்படும் என்றும் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்திருந்தாா்.
அண்மையில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் அதே கோரிக்கையை ஐஏஇஏ பொது இயக்குநா் ரஃபேல் கிராஸியும் முன்வைத்தாா். ஸபோரிஷியா அணுசக்தி மையத்தின் பாதுகாப்புக்கு சில நடவடிக்கைகள் சிறு துளி ஆபத்தை ஏற்படுத்தும் என்றால் கூட, அந்த நடவடிக்கைகள் தவிா்க்கப்படவேண்டியது அவசியம் எனவும், அங்கு நடப்பது குறித்து ரஷ்யாவும், உக்ரைனும் கூறுவதில் எது உண்மை என்பதை உறுதிப்படுத்த முடியாததால் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ள அந்த மையத்துக்குள் ஐஏஇஏ நிபுணா் குழு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.