அறுவை சிகிச்சை மூலம் கைரேகையை மாற்றி போலி பாஸ்போர்ட்டில் பலரை குவைத்துக்கு அனுப்பிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள சித்தவட்டம் அடுத்த ஜோதி கிராமத்தை சேர்ந்தவர் கஜ்ஜல கொண்டகரி நாகமுனேஷ்வர். இவர் சந்திரகிரி அருகே உள்ள மருத்துவ மையத்தில் கதிரியக்க நிபுணராக உள்ளார். குவைத்தில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றிய ஒருவரை இவர் சந்தித்தபோது, நூதன மோசடி பற்றி அறிந்தார். குவைத்தில் விசா காலாவதியாகிய அந்த நபர், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
பிறகு, இலங்கை சென்று கைரேகை மாற்று அறுவை சிகிச்சை செய்து புதிய கைரேகையுடன் மீண்டும் குவைத் சென்றதாக கூறினார். இதை கேட்டு ஆச்சர்யப்பட்ட முனேஷ்வர், திருப்பதியில் தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக பணிபுரிந்த, சுண்டுப்பள்ளியை சேர்ந்த சகபாலா வெங்கட்ரமணா என்பவரை கூட்டு சேர்த்து, குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டசிலருக்கு கைரேகை அறுவை சிகிச்சை செய்து தலா ரூ.25,000 வசூலித்து குவைத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக முனேஷ்வர், வெங்கடரமணா, சிவசங்கர், ராம கிருஷ்ணாவை தெலங்கானா போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த மேலும் 9 பேர் தேடப்பட்டு வருகின்றனர். கைரேகை மாற்றிய 11 பேர் தற்போது குவைத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கைரேகையை மாற்ற, விரல் நுனியில் உள்ள தோல் அடுக்குகளை வெட்டி, திசுக்களின் ஒரு பகுதி அகற்றப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறிய மாற்றங்களுடன் புதிய கைரேகை உருவாகிறது. இது ஒரு வருடம் இருக்கும். அதற்குள் புதிய ஆதார் அட்டை, பாஸ்போர்ட் பெற்று, இவர்கள் குவைத் செல்கின்றனர்.