தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி வழங்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வலியுறுத்தினார்.

மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீசர்பானந்த சோனாவாலை டெல்லியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சந்தித்தார். அப்போது அவரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த கோரிக்கை மனுவில், ‘மதுரை மாவட்டம் அரசு ஓமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டிடங்கள் சிதிலம் அடைந்துள்ள நிலையில் அதனை மறுகட்டமைப்பு செய்ய நிதி ஒதுக்க வேண்டும். அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழ்நாட்டில் அமைக்க விரைந்து ஒப்புதல் வழங்கவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மந்திரிக்கு அந்த துறையின் செயலாளர் ராஜேஷ் பூஷன் மூலம் 8 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மா.சுப்பிரமணியன் கொடுத்தார். அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச்செயலாளர் பா.செந்தில்குமார் உடன் இருந்தார்.

மா.சுப்பிரமணியன் கொடுத்த அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

* 27.1.2019 அன்று மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

* கோவை மாவட்டத்தில் 2-வது எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு நிறுவவேண்டும்.

* மருத்துவ கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவ கல்லூரி நிறுவ மத்திய அரசின் 60:40 என்ற பங்களிப்பு திட்டத்தில் அனுமதி வழங்க வேண்டும்.

* நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு மீது ஜனாதிபதியின் ஒப்புதலை விரைந்து பெற்றுத்தர வேண்டும்.

* தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவ கல்லூரிகளில் அரசு நர்சிங் கல்லூரி நிறுவ நிதி வழங்க வேண்டும்.

* உக்ரைனில் படித்த மாணவர்கள் இந்தியாவின் மருத்துவ கல்லூரிகளில் படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும்.

* மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளை கைவிடுமாறு தேசிய மருத்துவ குழுமத்துக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

* தமிழ்நாட்டுக்கு தேசிய நலவாழ்வு குழுமம், பிரதம மந்திரியின் ஆயூஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் மற்றும் பதினைந்தாவது நிதி ஆணையம் ஆகியவற்றின் கீழ் 2022-23 நிதியாண்டுக்கான முதல் தவணை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் உள்ளது.