அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கோவிட் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானது அமெரிக்கா. அங்கு இதுவரை 9 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10.48 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கோவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோசும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் இனி ஒவ்வொரு ஆண்டும் கோவிட் தடுப்பூசி போடப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். கோவிட் வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் அதனை சமாளிக்க இந்த நடைமுறை உதவும் எனவும் தெரிவித்துள்ளார். அதன்படி, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கோவிட் வைரஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போடப்படும் காய்ச்சல் தடுப்பூசி போல் கோவிட் தடுப்பூசியும் அவசியம் செலுத்தப்படும் என்றும், மக்கள் அதனைச் செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.