ரூ.200 கோடி மதிப்புள்ள போதை பொருளுடன் 6 பாகிஸ்தானியர்கள் கைது!

இந்திய கடலோர காவல் படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ போதை பொருட்களுடன், பாகிஸ்தான் படகை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் இருந்த 6 பேரை கைது செய்தனர்.

கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜாகாவ் துறைமுகத்திற்கு அருகே கடலோர காவல் படை மற்றும் ஏடிஎஸ் ஆகியவற்றின் கூட்டுக் குழுவினரால் போதைப் பொருள் ஏற்றிச் சென்ற மீன் பிடி படகை நடுக்கடலில் தடுத்து நிறுத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹெராயின் குஜராத் கடற்கரையில் இறக்கப்பட்ட பின்னர் சாலை வழியாக பஞ்சாப் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட இருந்தது. கடலோர காவல் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட படைகை தடுத்து நிறுத்தி, 40 கிலோ ஹெராயினுடன் ஆறு பாகிஸ்தானியர்களை கைது செய்யப்பட்டு உள்ளனர். கைப்பற்றப்பட்ட படகுடன் ஏடிஎஸ் மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் ஜாகாவ் கடற்கரையை அடைவார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

மாநில ஏ.டி.எஸ் மற்றும் கடலோர காவல்படை கடந்த காலங்களில் இதேபோன்ற போதைப் பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடித்து, குஜராத் கடற்கரை வழியாக இந்தியாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்த பெரிய அளவிலான போதைப் பொருட்களுடன் வெளிநாட்டினரைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.