மேற்கு வங்க தலைமைச் செயலக முற்றுகை போராட்டம்: போலீசார் பாஜகவினர் மோதல்!

மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பாஜகவினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் போலீசார் ஒருவரை விரட்டி விரட்டி அடிக்கும் காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாகவ கூறி, தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தது பாஜக.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்ட பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்டோர் தலைமையில் கோட்டையை நோக்கி அவர்கள் பேரணியாக சென்றனர்

போராட்டக்காரர்கள் தலைமைச் செயலக பகுதியை நெருங்கியபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தலைநகர் கொல்கத்தாவின் பல பகுதியில் பாஜகவினர் பேரணியாக வந்தபோது அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. தடுப்புகளை உடைத்தெறிந்து பாஜகவினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியை தொடர்ந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் , பேரணியாக வந்தவர்களை போலீசார் கலைக்க முயன்றனர். அப்போது வெடித்த வன்முறையில் காவல்துறை வாகனங்கள் சிலவற்றை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

வன்முறையின்போது போலீஸார் சிலர் படுகாயமடைந்த நிலையில், காவலர் ஒருவரை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி அடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து, சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரை போலீசார் கைது செய்தனர்.