லண்டன் வந்தடைந்தது இரண்டாம் எலிசபெத் உடல்!

மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி, இன்று லண்டன் வந்தடைந்தது.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்( 96), வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஸ்காட்லாந்திலிருந்து இன்று லண்டன் கொண்டு வரப்பட்ட ராணியில் உடல் பகிங்ஹாம் அரண்மனைக்கு இரு நாட்கள் வரை வைக்கப்படும். மறுநாள் ஊர்வலமாக புறப்பட்டு, வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இறுதி சடங்கு நடக்கும் தினம் வரை, ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி ராணியின் இறுதி சடங்கு நடக்கிறது. இதில், அரச குடும்பத்து உறுப்பினர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அதன்பின், லண்டனுக்கு வெளியே விண்ட்ஸர் அரண்மனையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில், ராணியின் கணவர் இளவரசர் பிலிப் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே ராணி எலிசபெத்தின் உடல் புதைக்கப்பட உள்ளது.

எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை வந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்துள்ளனர்.