முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டுகளின் அடிப்படை நோக்கம் என்ன?: அண்ணாமலை

வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் இதற்கு முன்னர் நடந்த ரெய்டுகளுக்கே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் இருக்கும் போது புது ரெய்டுகளின் அடிப்படை நோக்கம் என்ன? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது எல்இடி விளக்குகள் டெண்டர் விட்டதில், அரசுக்கு 500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் இறங்கினர். அதைத் தொடர்ந்து, வேலுமணி, அவரது நண்பர்கள் சந்திர பிரகாஷ், சந்திர சேகர், உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன்படி இன்று காலை கோவை, சுகுணாபுரத்தில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
எஸ்.பி.வேலுமணி வீடு, அவருக்கு சொந்தமான இடங்கள், வேலுமணியின் நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள், பினாமி நிறுவனங்கள் என சென்னையில் 10 இடங்கள், கோவையில் 9 இடங்கள் திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி என 31 இடங்களில் சோதனை நடத்தினர். எஸ்.பி வேலுமணி இல்லத்தில் காலை 6 மணிக்கு துவங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மாலை 3 மணி அளவில் நிறைவடைந்தது. இந்த சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கப் பணம், 1228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சொதனை நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மஞ்சக்கரனை பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரியின் புதிய மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு மாறாக சான்றிதழ் வழங்கியதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வந்தனர். விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 8 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களில் இன்று நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 18.37 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 1872 கிராம் தங்க நகைகள், 8.28 கிலோகிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ஒரே நேரத்தில் நடந்த இந்த ரெய்டுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடந்துள்ளன என அதிமுக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-

திமுக ஆட்சியின் மேல் மக்களின் அவநம்பிக்கை அதிகரித்து வருவதை திசை திருப்பும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருவதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கு முன்னர் செய்த சோதனைக்கே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலிருக்கும் போது புது சோதனைகளின் அடிப்படை நோக்கம் என்ன? திமுக அமைச்சர்கள் மீது குவியும் ஊழல் புகார்களை இருட்டடிப்பு செய்ய அரசு இயந்திரங்களை ஏவல் இயந்திரங்களாக மாற்றி இருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.