எடப்பாடியை முதல்வர் ஆக்கியது மன நிறைவு: சசிகலா

கொங்கு மக்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையிலேயே இந்தப் பகுதியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை மாநிலத்தின் முதல்வராக ஆக்கினேன். இயக்கத்தின் நலன் காக்க உண்மையான பங்களிப்பை செய்த மன நிறைவு உள்ளது என சசிகலா பேசியுள்ளார்.

தமிழகம் முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் சேலம், நாமக்கல் ஈரோடு மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டார். அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார் சசிகலா. சேலம் மாவட்டம் அரியானூரில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். அங்கிருந்து சங்ககிரி, பள்ளிபாளையம் பகுதிகளை தொடர்ந்து ஈரோட்டில் தொண்டர்களைச் சந்தித்தார். ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே அவரது ஆதரவாளர்கள் பூங்கொத்து வழங்கி அவரை வரவேற்றனர்.

கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட சசிகலா ஈரோட்டில் தொண்டர்களிடம் பேசினார். அங்கு பேசிய அவர், “அதிமுகவையும் கொங்கு மக்களையும் பிரிக்க முடியாது. இது இன்று நேற்று ஏற்பட்ட பந்தம் அல்ல. அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கிய காலம் முதல் அன்பும் ஆதரவும் அளித்து வருகிறீர்கள். இதற்காக கொங்கு மக்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்து வருகிறோம். இதனை மனதில் வைத்தே, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆட்சியை காப்பாற்றுவதற்கான நெருக்கடி நிலை ஏற்பட்ட போது, இந்தப் பகுதியை சேர்ந்த நிர்வாகியை மாநிலத்தின் முதல்வராக ஆக்கினேன். இதன் மூலம் எந்தவித பிரதிபலனும் பாராமல் இயக்கத்தின் நலன் காக்க உண்மையான பங்களிப்பை செய்த மன நிறைவு உள்ளது. மீண்டும் இயக்கத்தை பேரியக்கமாக கொண்டு வருவேன். நியாயமும் உண்மையும் தோற்காது. நாடாளுமன்ற தேர்தலில் நமது இயக்கம் சிறப்பான வெற்றியை பெற்று அம்மாவின் எண்ணத்தை காப்பாற்றுவோம். ஜெயலலிதாவை உடனிருந்து பார்த்தேன் ஜெயலலிதா என்னுடன் அருகில் இருந்து அனைத்தையும் பார்த்து கொண்டுள்ளார். நட்புக்கு இலக்கணமாய் நல்ல சகோதரிகளாய் இருந்தோம். ஜெயலலிதா கட்சிக்கு பொறுப்பேற்றபோது ஏற்பட்ட சிரமங்களை உடனிருந்து பார்த்தவள் நான். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் அனைவரையும் அரவணைத்து சமமாக நடத்தினார்கள். அதே வழியில் நானும் பயணிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.