உக்ரைனில் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா எச்சரித்து உள்ளதால் சிறிய அணு ஆயுதங்கள் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைனின் வடகிழக்கில் ரஷ்ய படைகளின் வசம் இருந்த பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டது. அதேபோல் கார்கிவ் புறநகர் பகுதிகளை மீட்டது. அங்கிருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கியது. இதற்கிடையே உக்ரைனில் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா எச்சரித்து உள்ளதால் சிறிய அணு ஆயுதங்கள் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “அணு ஆயுதம் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது 2-ம் உலக போருக்கு பிறகு போரின் முகத்தை மாற்றும். எனவே வேண்டாம். இதுபோன்ற ஆயுதங்களை பயன்படுத்தினால் அமெரிக்கா தக்க விளைவுகளை கொடுக்கும். அவர்கள் (ரஷ்யா) என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்து என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தீர்மானிக்கப்படும்” என்று கூறினார்.
இந்நிலையில், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் லண்டன் சென்றடைந்தார். அவரது விமானம் நேற்று இரவு 10:00 மணியளவில் லண்டன் அருகே உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தை சென்றடைந்தது. இன்று, ராணி எலிசபெத்தின் உடலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மரியாதை செலுத்துவார் என்றும் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் உடனான ஜோ பைடனின் திட்டமிடப்பட்ட சந்திப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது.