மகளிர் இட ஒதுக்கீட்டில் வட இந்தியர்களின் மனநிலை சரியில்லை: சரத்பவார்

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் வட இந்தியர்களின் மனநிலை சரியாக இல்லை என தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா, புனே டாக்டர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சரத்பவார் மற்றும் சுப்ரியா சுலே ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சரத்பவாரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சரத்பவார் கூறியதாவது:-

பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்னும் நிறைவேற்றப்படாதது என்பது பெண்களின் தலைமையை இன்னும் நாடு ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை என்பதை காட்டுகிறது. நான் காங்கிரஸ் எம்.பி.,யாக இருந்தது முதல் மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பேசி வருகிறேன். மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பார்லிமென்டின் மனநிலை, குறிப்பாக வட இந்தியர்களின் மனநிலை சரியாக இல்லை.

காங்கிரஸ் எம்.பி., ஆக பதவி வகித்த போது, மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பார்லிமென்டில் பேசினேன். பேசி முடித்த பின்னர் திரும்பி பார்த்தால், எனது கட்சியை சேர்ந்த ஏராளமான எம்.பி.,க்கள் எழுந்து சென்றுவிட்டது தெரிந்தது. எனது கட்சியை சேர்ந்தவர்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் முயற்சி செய்ய வேண்டும். நான் மகாராஷ்டிரா முதல்வராக இருந்த போது உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டம் கொண்டு வரப்பட்டது. முதலில் இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும், பிறகு மக்கள் ஏற்று கொண்டனர். இவ்வாறு சரத் பவார் பேசினார்.