நவீன யுகத்திலும் கூட தென்காசியில் நடந்த தீண்டாமை, சென்னையில் முஸ்லிம் சிறுவன் மீதான மதவெறுப்பு சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் அருகே பாஞ்சாங்குளம் கிராமம் உள்ளது. இங்கு பட்டியல் இன மக்களுக்கும், இன்னொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை உள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலுவையில் உள்ளன. இந்த பிரச்சனையை அடிப்படையாக வைத்து கிராமத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அதாவது பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மற்றொரு தரப்பினர் வைத்துள்ள கடைகளில் பொருட்கள் வழங்கப்படுவது இல்லை. சமீபத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் தின்பண்டங்கள் வாங்க முயன்றனர். இதனை கடைக்காரர் மகேஷ்வர் கொடுக்க மறுத்ததோடு பொருட்கள் தரமாட்டோம். இதுதொடர்பாக கிராம கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுபற்றிய புகாரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துடன் மகேஷ்வரன் மற்றும் அவரது உறவினர் ராமச்சந்திர மூர்த்தியையும் கைது செய்தனர். தொடர்ந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை கிராமத்தில் நுழைய தடை விதித்து அதிகாரிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கண்ணதாசன் தெருவில் 12 வயது சிறுவன் அரபி வகுப்பிற்கு சென்று திரும்பினார். இரவு 8 மணிக்கு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த நபர் ஒருவர், திடீரென அந்த சிறுவனின் சைக்கிளை மறித்து கோபமாக பார்த்து, ‛‛ஏய் உனக்கு குல்லா ஒரு கேடா” எனக்கூறி திட்டியுள்ளார். இது பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சாதி பெயரில் தீண்டாமை, மற்றும் மதத்தின் பெயரிலான வெறுப்பு காரணமாக இந்த சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன. இந்த 2 சம்பவங்களுக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
நவீன யுகத்திலும் தீண்டாமை என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் மாணவ செல்வங்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை. தென்காசி பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த இடத்திலும் இனி இத்தகைய சம்பவங்கள் நடக்கக்கூடாது. தீண்டாமையை போலவே மத வெறுப்பும் மோசமானது. சென்னையில் தலையில் தொப்பி அணிந்த இஸ்லாமிய சிறுவனை கேலி செய்யும் விதமாக நிகழ்ந்த செயலை ஏற்க முடியாது. நல்லிணக்கத்தை குலைக்கும் இத்தகைய செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.