பொருளாதார நடவடிக்கைகளில் செய்த தவறுகளுக்கு பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் மன்னிப்பு!

அரசின் பொருளாதார நடவடிக்கைகளில் செய்த தவறுகளுக்கு பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் மன்னிப்பு கோரினார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்றதைத் தொடர்ந்து புதிய அரசின் இடைக்கால பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல வரிச் சலுகைகள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. ஆனால், அமெரிக்க டாலருக்கு எதிரான பிரிட்டனின் கரன்சியான பவுண்டு கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், பிரிட்டனில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதை அடுத்து, சரியான பொருளாதார ஆலோசனைகளை வழங்கவில்லை என்று நிதி அமைச்சர் கவாசி கவார்தெங்கை, சமீபத்தில் பிரதமர் லிஸ் டிரஸ் நீக்கினார். புதிய நிதி அமைச்சராக, வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த ஜெர்மி ஹண்ட் நியமிக்கப்பட்டார். நிதி அமைச்சராக பதவியேற்ற ஹண்ட், பிரதமர் லிஸ் டிரஸ், மத்திய வங்கித் தலைவர் உள்ளிட்டோரை கடந்த சில நாட்களாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் புதிய அறிவிப்பை நேற்று அவர் வெளியிட்டார். இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து வரிச் சலுகைகளும் திரும்பப் பெறுவதாக அவர் அதில் குறிப்பிட்டு உள்ளார். நாட்டின் புதிய பட்ஜெட்டை, வரும், 30 ஆம் தேதி தாக்கல் செய்யும் போது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ் கூறியதாவது:-

நான் எனது கடமைகளை முழு பொறுப்புடன் ஏற்றுக் கொள்ள நினைக்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய தவறான பொருளாதார நடவடிக்கைகளுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். நமது பொருளாதாரத்தை சரி செய்வதில் நான் ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதும், தலைவராக தொடர்ந்து அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.