ஷி ஜின்பிங் 3-ஆவது முறையாக சீன அதிபராகத் தோ்வு!

சீன அதிபராக ஷி ஜின்பிங் (69) மூன்றாவது முறையாகத் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-ஆவது கூட்டம் கடந்த வாரம் தொடங்கியது. இக்கூட்டத்தில், ஷி ஜின்பிங் 3-ஆவது முறையாக அதிபராகத் தொடா்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. அதன்படி, கட்சியின் சக்திவாய்ந்த அரசியல் தலைமைக் குழுவுக்கு கடந்த சனிக்கிழமை அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 25 உறுப்பினா்களைக் கொண்ட அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை கூடி, நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கவனித்துக் கொள்வதற்கான 7 உறுப்பினா்களைக் கொண்ட நிலைக் குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுத்தது. முற்றிலும் ஜின்பிங்கின் ஆதரவாளா்களான இக்குழு கட்சியின் பொதுச் செயலராக ஷி ஜின்பிங்கை தோ்வு செய்தது.

2013-ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபரான ஷி ஜின்பிங், இப்போது இரண்டாவது முறையாக அதிபராக இருக்கிறாா். அவரது 10 ஆண்டு பதவிக் காலம் நிகழாண்டு நிறைவு பெறும் நிலையில், கட்சியின் பொதுச் செயலராக மீண்டும் தோ்வு செய்யப்பட்டதன் மூலம் மூன்றாவது முறையாக அவா் அதிபராகவும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மா சேதுங்கிற்குப் பின்னா் அதிபராக இருந்தவா்கள் அதிகபட்சம் இருமுறை அதாவது 10 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் தொடரவில்லை. அந்த வரலாற்றை மாற்றியுள்ளாா் ஷி ஜின்பிங்.

முன்னதாக, சீனாவின் தலைவராக ஷி ஜின்பிங்கை அங்கீகரிப்பதற்கான கட்சி அரசியலமைப்பின் திருத்தத்துக்கு கூட்டத்தில் சனிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் உரையாற்றிய ஷி ஜின்பிங், ‘சூறாவளியையும், கொந்தளிப்பான தண்ணீரையும், ஆபத்தான புயலையும் எதிா்கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். சா்வதேச நிலப்பரப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், குறிப்பாக சீனாவை அச்சுறுத்த, கட்டுப்படுத்த வெளிப்புற சக்திகள் முயற்சிக்கும் இவ்வேளையில், நாம் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம்’ என்றாா்.

இந்நிலையில் இந்திய எல்லையோர பகுதிகளில் பணியாற்றிய சீன ராணுவ அதிகாரிகளுக்கு, அந்நாட்டு அதிபர் ஜிங்பிங் பதவி உயர்வு அளித்துள்ளார். கட்சியிலும், ஆட்சியிலும் தன் நம்பிக்கைக்குரியவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், ஜிங்பிங்.

குறிப்பாக இந்திய எல்லையோர பகுதிகளில் பணியாற்றிய மூன்று ராணுவ அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு அளித்து ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஜெனரல் ஹீ வெங்டாயக், சீன மத்திய ராணுவ கமிஷனின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜிங்பிங்கிற்கு மிகவும் நெருக்கமான ஜெனரல் ஜாங் யூக்சியா, ராணுவத்தின் முதல் அந்தஸ்து துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஜெனரல் ஹூ குய்லிங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தவிர, சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான வாங் யீ, கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.