பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பின்புலத்தில் பிரதமர் உள்பட 3 பேரை காயம் அடைந்த இம்ரான் கான் குறிப்பிட்டு உள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார். அதனால், இம்ரான் கானை கொல்லும் நோக்கத்துடன் வந்தேன் என அந்நபர் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
எனினும், துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த ஆசாத் உமர் மற்றும் மியான் அஸ்லாம் இக்பால் ஆகியோர் கூறும்போது, சிறிது நேரத்திற்கு முன்பு இம்ரான் கான், இந்த விவகாரம் பற்றிய அறிக்கையை அவரது சார்பில் வெளியிடும்படி எங்களிடம் கூறினார். அதன்படி, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் 3 பேரால் நடத்தப்பட்டு உள்ளது என அவர் நம்புகிறார். அவர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணா சனாவுல்லா மற்றும் மேஜர் ஜெனரல் பைசல் என கூறியுள்ளார். இம்ரான் கான், தனக்கு தகவல் வந்துள்ளது என்றும் அதன் அடிப்படையிலேயே கூறினேன் என்றும் எங்களிடம் கூறினார் என இருவரும் தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் நியமனம் விவகாரம் தொடர்பாகவும், பிரதமர் ஷெரீப்புக்கு எதிராக தொடர்ந்து சில நாட்கள் இம்ரான் கான் அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளார்.
அவரது கால்களில் குண்டு துளைத்துள்ளதாகவும், ஆனாலும் அவர் உயிருக்கு ஆபத்து ஏதுவும் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவலையடுத்து இம்ரான் கான் ஆதரவாளர் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர், போலீசாரிடம் தெரிவித்ததாவது:-
வசிராபாத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்தேன். வாகனத்தை எனது மாமா கடையில் நிறுத்தினேன். இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துவதால் அவரை துப்பாக்கியால் சுட்டேன். அவர் செய்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பேரணி தொடங்கும் போதே அவரை தீர்த்துக் கட்ட எண்ணினேன். எனக்கு யாருடைய ஆதரவும் இல்லை. என்னை யாரும் தூண்டி விடவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.