இந்திய மக்கள் கடுமையாக உழைக்க கூடியவர்கள்: அதிபர் புதின்

ரஷ்ய ஒற்றுமை தினத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் சந்தேகமேயின்றி வளர்ச்சியில் இந்தியா சிறந்த சாதனை படைக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா கடந்த 8 மாதங்களுக்கும் கூடுதலாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவின் ஒற்றுமை தினம் ஆண்டுதோறும் நவம்பர் 4-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

இந்தியாவை பாருங்கள். உள்நாட்டு வளர்ச்சிக்கு தேவையான ஒரு திறமையான, கடுமையாக உழைக்க கூடிய மக்களை கொண்டுள்ளது. வளர்ச்சி என்று வரும்போது, இந்தியா நிச்சயம் சிறந்த சாதனைகளை படைக்கும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏறக்குறைய 150 கோடி மக்கள் உள்ளனர். அதுவே அவர்களுக்கான ஆற்றலாக உள்ளது.

ஆப்பிரிக்கா நாட்டை மேற்கத்திய நாடுகள் கொள்ளையடித்து சூறையாடி சென்று விட்டன. அது ஒரு வெளிப்படையான உண்மை. காலனி ஆதிக்கத்தில் ஈடுபட்ட நாடுகளின் செல்வசெழிப்புக்கு ஆப்பிரிக்காவை அவர்கள் கொள்ளையடித்ததுதான் காரணம். அதை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் மறைக்கவில்லை. ஆப்பிரிக்காவின் துயரத்தில் இருந்தும், வேதனையில் இருந்துமே இந்த நாடுகள் வளம் பெற்றுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளின் வளம் முழுமைக்கும் ஆப்பிரிக்க சுரண்டல் மட்டுமே காரணம் என்று நான் கூறவில்லை. ஆனால் மிக முக்கிய காரணம் கொள்ளை, அடிமை வணிகம் ஆகியவையே ஐரோப்பியாவின் செழுமைக்கு முக்கிய காரணம். கிறிஸ்தவ மதத்தின் அப்படையில் ரஷ்யா ஐரோப்பிய கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க ஒரு அங்கம். ஆனால் ரஷ்ய நாகரிகமும், கலாச்சாரமும் தனித்தன்மை வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.