அண்ணாமலை என்று எழுதுவதற்கே பெரியாருக்கு நன்றி சொல்ல வேண்டும்: சு.வெங்கடேசன்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீரமாமுனிவர் என்ற கிருஸ்துவருக்கும், பெரியார் என்ற நாத்திகருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பாக பொதுக்கூட்டம் மற்றும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சியில் மொழியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டார். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற மாநாட்டில் சு.வெங்கடேசன் பேசியதாவது:-

1938ல் நாத்திகம் பேசிய பெரியார், முதல் மொழி போராட்டத்தை கையில் எடுத்து அறைகூவல் விடுத்த போது, நாத்திகர்களே வாருங்கள் என்று மட்டும் சொல்லவில்லை. மாறாக உங்கள் சிவனார் அருளிய தமிழுக்கு வந்துவிட்டது ஆபத்து. சைவர்களே வாருங்கள், என்றும் வைணவரிடம் பேசினார். நம் இயக்க தோழர்களிடம் பேசினார். பட்டையும், கொட்டையும் போட்டுள்ள ஒருத்தரையும் விடாதே, அனைவரையும் சேர் என்று கூறினார். பெரியாரின் அன்றைய போராட்டம் இப்போது தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான காரணம், அது தமிழ்ச் சமூகத்தின் மேன்மைக்கான போராட்டம். அனைத்து அரசியல் கட்சிகள், சைவர்கள், வைணவர்கள், அமைப்புகள் என அனைவரையும் இணைத்து இது பண்பாட்டு படையெடுப்புக்கு எதிரான போராட்டம் என்ற புரிதலோடு போராடினார். அதனால் தான் தமிழ்ச் சமூகத்தின் மொழி அரசியல் இந்திய அரசியலில் எதிரொலிக்கும் போராட்டமாக அமைந்தது.

மொழிப் போராட்ட வரலாற்றில் திருச்சிக்கு பெரும் பங்கு இருக்கிறது. இந்திக்கு எதிராக தமிழ்நாட்டில் முதல் தீயை பற்றவைத்தது திருச்சி மாநகரம் தான். தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை அவர்களே, நீங்கள் ஒவ்வொருமுறை உங்களின் பெயரை எழுதும் பொழுதும் கையெழுத்திடும் போதும் வீரமாமுனிவர் என்ற கிருஸ்துவருக்கும் தந்தை பெரியார் என்ற நாத்திகருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறீர்கள். ஏனென்றால் உங்கள் பெயருக்கு முன்னால் எழுதும் கே எழுத்தை உருவாக்கியவர் வீரமாமுனிவர். அதேபோல் உங்கள் பெயரில் வரும் ணா என்ற எழுத்து சில காலத்திற்கு முன், கீழ் விலங்குடன் சேர்த்து எழுதப்படும். அந்த விலங்கை கழற்றியவர் பெரியார். அதேபோல் லை என்ற எழுத்து தும்பிக்கையுடன் எழுதப்பட்டது. அந்த தும்பிக்கையை கழற்றியவர் தந்தை பெரியார். அதனால் ஒவ்வொருமுறை நீங்கள் கையெழுத்திடும் போது வீரமாமுனிவர், பெரியார் ஆகியோருக்கு நன்றி சொல்லிவிட்டு தான் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.