கலெக்டர், என்.எல்.சி., அதிகாரிகளை ஊருக்குள் விடாமல் மக்கள் முற்றுகை!

என்.எல்.சி., அதிகாரிகளுடன் வந்த கலெக்டரை ஊருக்குள் வர விடாமல் தடுத்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரிவெட்டி, வளையமாதேவி, மும்முடிசோழகன், கத்தாழை, சாத்தப்பாடி, ஊ.ஆதனுார் உள்ளிட்ட ஏழு கிராமங்களில், நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவனம், விரிவாக்க பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், ஏக்கர், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகள் ஒப்படைக்காமல், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி., நிறுவனம் தீவிரமாக முயற்சித்து வருவதற்கு, கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களை பார்வையிட, நேற்று பகல், 1:00 மணியளவில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, கலெக்டர் பாலசுப்ரமணியம், வருவாய் துறையினர் மற்றும் என்.எல்.சி., அதிகாரிகள் கரிவெட்டி கிராமத்திற்கு வந்தனர். தகவலறிந்த கத்தாழை கரிவெட்டி, மும்முடிசோழகன் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் திரண்டு, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை ஊருக்குள் விடாமல் தடுத்து, முற்றுகையிட்டனர். இதையடுத்து, நிலங்களை பார்வையிடாமல் கலெக்டர், என்.எல்.சி., அதிகாரிகள், வருவாய்த் துறையினர் அங்கிருந்து புறப்பட்டனர். இதையடுத்து, கிராம மக்கள் கலைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.