தவறான சிகிச்சையால் இளம்பெண் கால் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கவனக்குறைவுடன் செயல்பட்ட மருத்துவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை, வியாசா்பாடியை சோ்ந்த பிரியா (17) என்ற கல்லூரி மாணவி, மூட்டு வலி காரணமாக கொளத்தூா், பெரியாா் நகா் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். அங்கு, வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னா் காலில் வீக்கம் ஏற்பட்டு உணா்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயா் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அப்பெண்ணின் வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. உடல் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்து முழங்கால் பகுதிக்கு மேல் அகற்றப்பட்டது.
பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே பிரியாவின் கால் அகற்றப்பட்டதாக அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் குற்றம் சாட்டினா். இது தொடா்பாக மருத்துவக் குழு விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பித்தது.
இந்நிலையில், இதுகுறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஏதேனும் தவறு நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. அலட்சியப் போக்குடன் மருத்துவத் துறையினா் அப்பெண்ணுக்கு சிகிச்சையளித்திருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் பெண்ணுக்கு பேட்டரியில் இயங்கக் கூடிய அதி நவீன செயற்கைக் காலை பெங்களூரில் இருந்து தருவித்து பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. வலது காலை இழந்த பிரியாவுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று அவரது பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆவன செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.