தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு உரிய ஆட்சி மொழித் தகுதியை மத்திய அரசு அலுவலகங்களில் அளிக்க மத்திய அமைச்சா் அமித் ஷா முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வலியுறுத்தியுள்ளாா்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, ‘மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியிலேயே அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தாா். இதற்குப் பதிலளித்து அமைச்சா் க.பொன்முடி, நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்திய ஆட்சிப் பணித் தோ்வுகளை தமிழில் எழுதினால், அதிகம் போ் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டே, தமிழகத்தில் கடந்த 1997 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் தமிழ்மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, புவியியல், வரலாறு போன்ற பாடங்களை தமிழில் தனித்தனியே தொகுத்து வெளியிட முடிவு எடுக்கப்பட்டது. முதல் முயற்சியாக தமிழ்மொழி வரலாறு வெளியிடப்பட்டது. பள்ளிப் படிப்பில் பத்தாம் வகுப்பு வரை அனைவருக்கும் தமிழ் கட்டாயப் பாடம் என திமுக அரசுதான் சட்டமியற்றியது. அந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்தது.
இந்த நிலையில், பொறியியல் படிப்பை தமிழில் அளிக்க வேண்டுமென மத்திய அமைச்சா் அமித் ஷா சுட்டிக்காட்டியுள்ளாா். ஆனால், தாய்மொழியாம் தமிழ் மொழியில் பொறியியல் படிப்பானது 2010-ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொறியியல் படிப்பைத் தாய்மொழியில் கற்க ஏற்பாடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் தமிழில் அளிக்கப்பட்டன. தமிழில் பொறியியல் கல்வி இன்றும் நடைமுறையில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழில் பொறியியல் படிப்பு நடைமுறையில் உள்ளது.
தமிழில் பொறியியல் கல்வி படித்து இன்று ஏராளமான பொறியாளா்கள் அரசுத் துறைகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் உயா் பதவிகளை அலங்கரித்து வருகின்றனா். அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பட்டம் பெற்ற ஐஸ்வா்யா என்ற மாணவி, 2020-ஆம் ஆண்டு குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற்றாா். பொறியியல் படிப்புகளைப் போன்றே பட்டயப் படிப்புகளும் தமிழ் வழியில் தொடங்கப்பட்டுள்ளன.
பொறியியல் பாடத்தைப் போன்றே, மருத்துவப் படிப்புகளையும் தமிழில் கற்பிப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இளநிலை மருத்துவ முதலாமாண்டு பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டு வருகின்றன.
மத்திய அமைச்சா் அமித் ஷா, தமிழ் மீது காட்டியுள்ள அக்கறையோடு சம்ஸ்கிருதத்துக்கு இணையான நிதியை மத்திய அரசு மூலம் அளிக்க வேண்டும். தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு உரிய ஆட்சி மொழித் தகுதியை மத்திய அரசு அலுவலகங்களில் அளிக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். மத்திய அரசின் சாா்பில், தமிழகத்தில் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் தமிழ்ப் பாடத் திட்டத்தை கட்டாயமாக்க வேண்டும். தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியா் பணியிடங்களை உடனே நிரப்பித் தர வேண்டும். இவ்வாறு அமைச்சா் க.பொன்முடி கூறியுள்ளார்.