ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு காரணமே என் தலைமையிலான தமிழக அமைச்சரவை தீர்மானம்தான் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இதனடிப்படையில் நளினி உள்ளிட்ட எஞ்சிய 6 தமிழரையும் உச்சநீதிமன்றம் அதிரடியாக விடுதலை செய்தது. இவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நளினி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆகையால் அவர் விடுதலையாகி வீட்டுக்கு சென்றார். எஞ்சிய 4 பேரும், இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஊடகங்களுக்கு நளினி பேட்டி அளித்து வருகிறார். அதில், தமது விடுதலைக்கு காரணம் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமிதான். முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் தீர்மானம் போட்டதுதான் தங்களது விடுதலைக்கு காரணம் என கூறி இருந்தார். இதற்கு திமுகவினர் சமூக வலைதளங்களில் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னையில் நேற்று மழை,வெள்ள பாதிப்புகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுடன் பார்வையிட்டார். இதன்பின்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது சென்னை மாநகராட்சி, தமிழக அரசின் செயல்பாடுகளை எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். அப்போது நளினி உள்ளிட்ட 6 தமிழர் விடுதலை தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த கேள்விகளை செய்தியாளர்கள் கேட்ட போது தமது பிரஸ் மீட்டை முடித்துவிட்டு எழுந்தார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் திடீரென நாற்காலியில் திரும்ப வந்து அமர்ந்து பதிலளித்தார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது, கருணாநிதி முதல்வராக இருந்த போது அமைச்சரவை கூட்டப்பட்டது. அந்த அமைச்சரவையில் என்ன தீர்மானம் நிறைவேற்றினார்கள்? நளினிக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக்கலாம் என்பதுதான். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நான் முதலமைச்சரான போது, மீண்டும் அமைச்சரவையை கூட்டினோம். நான் திடமான முடிவெடுத்தேன். நான் எப்போது முடிவெடுத்தாலும் அது திடமான முடிவு. நியாயமான முடிவு. மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய முடிவாக இருக்கும். அப்படி அமைச்சரவையைக் கூட்டி ஏகனமதாக, அனைவரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த தீர்மானம்தான் கால தாமதமாகி இப்போது விடுதலையாகி இருக்கிறார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.