தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சமீபத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் அமலான திட்டம் இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி, மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இது விரைவில் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் தான் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிர்வாகங்களின் பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்க முடிவு செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள கோவில்கள் சார்பில் 27 பள்ளிகள், 10 கல்லூரிகள் என மொத்தம் 37 கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் பள்ளிகளில் 13,740 மாணவர்களும், கல்லூரிகளில் 13,379 மாணவர்கள் என மொத்தம் 27,119 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. மேலும் முதற்கட்டமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் 2 பள்ளிகள், ஒரு பாலிடெக்னிக், 3 கலை அறிவியல் கல்லூரி என மொத்தம் 6 கல்வி நிறுவனங்களில் திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் இயங்கி வரும் பள்ளி கல்லூரிகளில் பயிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிப்பு வெளியிப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தின் 2 பள்ளி, 4 கல்லூரிகள் என மொத்தம் 6 கல்வி நிறுவனங்களின் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.