உலகம் முழுவதும் 10 ஆயிரம் பேரை அமேசான் அதிரடியாக நீக்கியது!

டுவிட்டர், முகநூலைத் தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஆள்குறைப்பு பணியை தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது மொத்த பணியாளர்களில் 3 சதவீதமாகும்.

சமீபத்தில் 3.5 லட்சம் கோடி கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலன் மாஸ்க் அந்நிறுவனத்தில் 4 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணியிலிருந்து நீக்கினார். இதனைத் தொடர்ந்து, முகநூலின் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் 13 சதவிகிதமாகும்.

இந்த வரிசையில், உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமான அமேசானும் தற்போது இணைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யும் பணியை இந்த வாரமே மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான் நிறுவனத்தில் சில பணியிடங்கள் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்டு, அந்தப் பணியில் இருப்பவர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் காலியாக இருக்கும் வேறு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. தற்போது 10 ஆயிரம் பேரை நீக்கி அதை உறுதிப்படுத்தியது. பணியில் இருந்து நீக்கியது தொடர்பாக ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் அந்த நிறுவனம் தகவலையும் அனுப்பி உள்ளது.

அமேசான் இந்தியாவை பொறுத்தவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணிபுரிந்து வரும் நிலையில், எத்தனை பேரை பணி நீக்கம் செய்யலாம் என்ற ஆலோசனை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.