கர்நாடகத்தில் கிராம மக்களிடம் அடி வாங்கிய பாஜக எம்.எல்.ஏ.!

கர்நாடகத்தில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணைப் பார்க்க வந்த பாஜக எம்.எல்.ஏ.வை அப்பகுதி மக்கள் சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானை தாக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தினர்.

கர்நாடக மாநிலம் சிங்மங்களூரு மாவட்டத்தின் முடிகிரே தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. குமாரசாமி. சிங்மங்களூரு மாவட்டத்தின் ஹுல்லிமானே கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். யானை தாக்குதல் குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், எம்.எல்.ஏ.விடமும் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டதாக கிராம மக்கள் சார்பில் கூறப்படுகிறது.

இதனிடையே உயிரிழந்தப் பெண்ணின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்ற நிலையில், அதனைக் காண்பதற்காக அத்தொகுதியின் எம்.எல்.ஏ. குமாரசாமி, அப்பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கிராம மக்கள் எம்.எல்.ஏ. மீது கட்டை உள்ளிட்டவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இளைஞர்கள் சிலர் குமாரசாமியின் சட்டையைக் கிழித்து அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், கிராம மக்களிடமிருந்து எம்.எல்.ஏ.வை மீட்டு காரில் அழைத்துச்சென்றனர்.