நம் தலைமுறை மட்டும் தான் இந்த காலநிலை மாற்றத்திற்கு தீர்வு கொண்டு வர முடியும்: அன்புமணி

நம் தலைமுறை மட்டும் தான் இந்த காலநிலை மாற்றத்திற்கு தீர்வு கொண்டு வர முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து பேசினார். அவருடன் பாமக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஏகே மூர்த்தி ஆகியோரும் உடனிருந்தனர். தொடர்ந்து தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில் திட்டங்கள் குறித்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி எம்.பி. கோரிக்கை மனு அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் காசியில் தமிழ் சங்கம் நடத்தியதற்கும் ஈ வெ ராமசாமி காசிக்கு போன பிறகுதான் பெரியாராக உருவெடுத்தார். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? என செய்தியாளர் கேட்டார். இதனால் அதிருப்தியடைந்த அன்புமணி கூறியதாவது:-

நல்ல கேள்விகள் எத்தனையோ இருக்கிறது நாட்டின் நிலைமை நீர் மேலாண்மை சுகாதாரம் கல்வி இப்படி எண்ணற்ற கேள்விகள் இருக்கிறது. இதைப் பற்றி ஆக்கபூர்வமாக எந்த கேள்வியும் கேட்காமல் வெருப்பை விதைக்கும் விதமாக சில அரசியல் கட்சிகளுக்கு துணை போகும் விதமாக கேள்விகள் கேட்பது நாட்டிற்கு நல்லதல்ல. இதைப் போல் கேள்விகளை செய்தியாளர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த விளைபொருட்கள், அவர்கள் கேட்கும் விலைக்கு வாங்கப்படுகிறதா என்று கேளுங்கள், இளைஞர்களுக்கு சரியான வேலை வாய்ப்பு கிடைக்கிறதா என்று கேள்வி கேளுங்கள், உங்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறதா? உங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் போதுமான அளவில் இருக்கிறார்களா என்பதை கேளுங்கள், உங்களுக்கு தரமான மருத்துவம் கிடைக்கிறதா என்று இது போன்ற கேள்விகளை கேளுங்கள். பிரிவினையை உண்டாக்கும் கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள்? அது தேவையில்லை. மக்களை இணைக்க பாருங்கள். உங்களின் அரசியலுக்காக மக்களை பிரிக்காதீர்கள்.

வளர்ச்சி என்பது நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். நல்ல சுகாதாரத்தை கொடுக்க வேண்டும். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வளர்ச்சி திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இப்போது இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சனை, தமிழகத்தின் பிரச்சனை, இந்தியாவின் பிரச்சனை ஏன் உலகத்தின் பிரச்சனை ‘காலநிலை மாற்றம்’ தான். ஆனால் இது குறித்து யாராவது பேசுகிறீர்களா? ஒரு விவாதம் நடக்கிறதா? நம் தலைமுறை மட்டும் தான் இந்த காலநிலை மாற்றத்திற்கு தீர்வு கொண்டு வர முடியும். நாம் விட்டு விட்டால் அடுத்த தலைமுறை இதற்கு தீர்வு காண முடியாது. நாம் காலநிலை மாற்றம் குறித்து பேச வேண்டும், விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.