முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு, கோவா மாநில சுற்றுலாத்துறை நோட்டீஸ்!

கோவாவில் உள்ள தனது வில்லாவை தங்கும் விடுதியாக மாற்ற உரிய அனுமதி பெறாததால், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு, கோவா மாநில சுற்றுலாத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவா மாநிலம் மோர்ஜிமில் உள்ள ‘காசா சிங்’ என்ற தனது வில்லாவை, யுவராஜ் சிங், சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் பதிவு செய்யாமல், ஆன்லைனில் தங்கும் விடுதியாக விளம்பரப்படுத்தி உள்ளார். 3 படுக்கையறைகள் மற்றும் 3 குளியலறைகள் கொண்ட இந்த வில்லாவில் தங்க ஒரு இரவுக்கு ரூ.1,212 கட்டணம் என அதில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக டிசம்பர் 8ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு யுவ்ராஜ்சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கோவா சுற்றுலா வர்த்தகப் பதிவுச் சட்டம், 1982 ன் படி, சுற்றுலாத் துறையிடம் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் பதிவு செய்வது கட்டாயமாகும். இந்நிலையில், கோவா அரசு சார்பில் அனுப்ப்பட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:-

வர்ச்சவாடா, மோர்ஜிம், பெர்னெம், கோவா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பண்ணை வீடுகள், தங்கும் விடுதிகளாக ஆன்லைன் தளங்களில் சந்தைப்படுத்தப்படுவதாக கூறப்படுவது கவனத்திற்கு வந்துள்ளது. நவம்பர் 11ம் தேதி உங்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் துறை அதிகாரிகளால் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. கோவா சுற்றுலா வர்த்தக சட்டத்தின் கீழ் பதிவு செய்யத் தவறியதற்காக உங்கள் மீது ஏன் அபராதம் விதிக்கக் கூடாது. குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் உரிய பதில் வரவில்லை என்றால், இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் சரியானவை என்றும், பிரிவு 22ன் கீழ் அல்லது இந்தச் சட்டத்தின் ஏதேனும் விதிகளை மீறியதற்காக தண்டிக்கப்படுவீர்கள். மேலும் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.