திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்டதை தார் பூசி அழித்ததை திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் சேவை மையம் பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. திடீரென இந்த பெயர் பலகையாது, இந்தியில் சகயோக் என எழுதப்பட்ட நிலையில் மாற்றப்பட்டது. சகயோக் என இந்தி சொல்லை தமிழிலும் எழுதி இருந்தனர். இது கடும் சர்ச்சையானது.
திருப்பூர் ரயில் நிலையத்தில் சகயோக் என இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதற்காக பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து திருப்பூர் ரயில் நிலைய அதிகாரிகள் தாமாகவே முன்வந்து இந்தி திணிப்பு பலகையை அகற்றிவிட்டனர். இதனால் போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.
இது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
திருப்பூர் ரயில் நிலைய சேவை மைய பெயர் தமிழில் எழுதப்பட்டதை அகற்றி இந்தி எழுத்தால் எழுதியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் அதிகாரிகளால் இன்று அந்தப் பதாகை அகற்றப்பட்டுள்ளது. ‘காவி’களின் இந்தித் திணிப்பை, ‘கருப்பு’ தார் கொண்டு அழித்த திராவிட மண் என்றும் அனுமதிக்காது. எச்சரிக்கிறோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதஸ் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:-
திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது. இந்தி தெரிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இது புரியாது. இது புதிய வகை இந்தித் திணிப்பாகும். புதிய, புதிய வகைகளில் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் தொடர்வண்டித்துறை விளையாடக் கூடாது. இந்தியைத் திணிக்கும் இத்தகைய அறிவிப்பு பலகைகள் திருப்பூர் உட்பட எங்கு இருந்தாலும் அவற்றை தொடர்வண்டித் துறை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.