தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல என்று தெலுங்கானா புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது. மேலும் பல்கலைக்கழக நிகழ்வுகளில் வேந்தர் என்ற முறையில் பங்கேற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிகளில் சனாதானம் குறித்து பேசியது தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிராக களமிறங்கியுள்ளன. திமுக மட்டுமல்லாது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆர்.என்.ரவிக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கைகள் கண்டனங்கள் என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக கவர்னர் பதவி என்பதே காலாவதியான ஒன்றுதான். கவனர் பதவி என்பது தேவையே இல்லாத ஒன்று. அதை புரிந்துகொண்டு ஆளுநர் பதவியை ரத்து செய்தால் பல சிக்கல்கள் இருக்காது என கனிமொழி பேசியிருந்தார். இந்நிலையில் கனிமொழியின் கருத்துக்கு முன்னாள் பாஜக தலைவரும், தெலுங்கானா புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், “நாட்டில் பிரிவினை பேசுவதாக கூறிய இராணுவ வீரரின் வீட்டுக்கு சென்று ஒரு இயக்கைத்தை சேர்ந்தவர்கள் மிரட்டி துன்புறுத்தி உள்ளனர். இது தேசப்பற்றை குலைக்கும் செயல். ஆளுநராக இருந்தால் கூட, நான் தேசபற்று உடையவர் என்பதால் இந்த கருத்தை கூறுவதில் எந்த தவறும் இல்லை. தமிழக ஆளுநர் காலாவதியானவர் என கருத்து சொல்வதை திமுக எம்.பி கனிமொழி தவிர்க்க வேண்டும். மரியாதை கொடுக்க கூடாது என்கிற எண்ணம் பல பேருக்கு உண்டு. கருத்து கூறலாம். ஆனால் மிக மோசமான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல” என கூறியுள்ளார்.