சீனா உடனான உறவின் பொற்காலம் முடிந்து விட்டதாக, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் நாட்டின் பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அண்மையில் பதவி ஏற்றுக் கொண்டார். இவர், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். பிரிட்டன் நாட்டின் மிக இளம் வயது பிரதமரான ரிஷி சுனக், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில், அரசின் வெளியுறவு கொள்கையை விளக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் பேசியதாவது:-
வரும் 2050 ஆம் ஆண்டில் உலக வளர்ச்சியில் இந்தோ – பசிபிக் பிராந்தியங்களில் பங்களிப்பு 50 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் என்பதால், இந்தியா உடன் தடையற்ற வர்த்தக உறவு மேற்கொள்ள விரும்புகிறேன். பிரிட்டன் – சீனா உறவில் நிலவிய பொற்காலம் முடிந்து விட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்னைகளில் சீனாவின் முக்கியத்துவத்தை வெறுமனே புறுக்கணிக்க முடியாது. சீனா மற்றும் இந்தோனேசியா உடனான உறவிலும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்.
பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கை புதிய ஆண்டில் வெளியிடப்படும். இது காமன்வெல்த் நாடுகளுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கும். போட்டி நாடுகளை அணுகும் போது வெறும் கற்பனையை விட்டுவிட்டு வலுவான உண்மை நிலையை பிரிட்டன் பின்பற்ற வேண்டும். சீனாவில் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்துவோருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இரு நாட்டுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளாக இருந்த நெருங்கிய பொருளாதார உறவு அப்பாவித்தனமானது.
பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை மிரட்டல் இல்லாமல் செய்ய வேண்டும். சீனாவில் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அனைத்தையும் ஊடகங்கள் முன்னிலைப்படுத்த வேண்டும். சீன அரசின் அடக்குமுறை முயற்சிகள், நமது சொந்த சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையை நமக்கு நினைவூட்டுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.