துணை ராணுவப் படைகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பிற்கு, திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு முகாம்கள் தனித்தனியாக நடைபெறும். இந்த முப்படைகளைக் கொண்ட ராணுவம் பாதுகாப்புத் துறைக்குக் கீழ் வரும். அதேநேரம் அசாம் ரைபிள்படை, மத்திய ஆயுத காவல்படை உள்ளிட்டவற்றைக் கொண்ட இந்த துணை ராணுவப் படைகள் உள்துறை அமைச்சகத்தின் வரும். இதற்கிடையே துணை ராணுவப் படைகளுக்கும் தொடர்ச்சியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி சமீபத்தில் எல்லை பாதுகாப்பு மடை, மத்திய தொழிற்பாதுகாப்பு படை, அசாம் ரைபிள்படை, மத்திய ஆயுத காவல்படை உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் இடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தன. இந்தத் தேர்வில் விண்ணப்பிக்க நாளை (நவ.30) தான் கடைசி தேதியாகும். தமிழகத்தில் இருந்தும் கூட பலரும் இதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதில் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வுகள் உள்ளன. அடுத்தாண்டு தொடக்கத்தில் இதற்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதற்கிடையே எழுத்துத் தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும் என்று இதில் கூறப்பட்டுள்ளதே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதனால் ஆங்கிலம் அல்லது இந்தி தெரியாதவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்புக்குப் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறைந்தது நாட்டின் அனைத்து அலுவல் மொழிகளிலும் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று இணையத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே திமுக எம்பி கனிமொழியும் இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அசாம் ரைபிள் படை, மத்திய ஆயுத காவல்படை, சிறப்புப் பாதுகாப்புப் படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு முதலிய பணிகளுக்கு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம். தொடர்ந்து தகுதித் தேர்வுகளில் இந்தியைத் திணித்து, இந்தி அல்லாத மொழிகள் பேசும் மாநிலங்களிலுள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தடுக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது. மொழி உரிமை என்பது இந்த நாட்டில் அனைவருக்கும் இருக்கிறது என்று ஒன்றிய அரசு உணரவேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.