தமிழர்களுக்கும், மதசார்பின்மைக்கும் எதிரானது சிஏஏ: திமுக பிரமாணபத்திரம்!

சிஏஏ எனும் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் என்பது இந்தியாவின் மதசார்பின்மைக்கும், தமிழ் இனத்துக்கும் எதிரானது என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் உள்ளிட்டவர்கள் மதசிறுபான்மையினர்களாக உள்ளனர். இவர்கள் அவ்வப்போது துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழும் நிலையில் அந்த 3 நாடுகளில் இருந்து வெறியேறும் மதசிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க மத்திய பாஜக அரசு முடிவு செய்தது. இதற்காக தான் கடந்த 2019ல் மத்திய அரசு சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வருவதாக அறிவித்தது. இதற்காக இந்திய குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2019 டிசம்பரில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர், ஜைனர்கள், பார்சி, கிறிஸ்தவ மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யும். மேலும் மேற்கூறிய மதத்தை சேர்ந்தவர்கள் 3 நாடுகளில் இருந்து இந்தியா வந்த பிறகு 6 ஆண்டுகளில் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்ய முடியும். இதில் முஸ்லிம் மக்கள் பற்றி எந்த விபரமும் இடம்பெறவில்லை.

இதற்கிடையே தான் முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயல்பாட்டில் மத்திய பாஜக அரசு ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதாவது அந்த நாட்டில் இருந்து வரும் முஸ்லிம் மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க மத்திய அரசு மறுப்பதாக புகார்கள் எழுந்தன. அதோடு சிஏஏவை செயல்பாட்டுக்கு கொண்டு வரக்கூடாது என பல்வேறு தரப்பினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. திமுக சார்பிலும் சிஏஏவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இலங்கையில் துன்புறுத்தலுக்கு ஆளாகி தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது பற்றிய விபரங்கள் இல்லாததற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சிஏஏவை மத்திய அரசு கைவிட வேண்டும் என கூறப்பட்டது.

திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தொடர்ந்த இந்த வழக்கில் அக்கட்சியின் எம்பியும், வழக்கறிஞருமான வில்சன் ஆஜராகி வந்தார். இந்நிலையில் தான் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‛‛சிஏஏ சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட மூன்று நாடுகளுடன் மட்டுமே தொடர்புடையதாக உள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் இந்து, சீக்கியர், பவுத்தர், ஜெயின், பார்சி, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் குடியுரிமை வழங்க வழி செய்கிறது. இது தன்னிச்சையானதாகவும், முஸ்லிம்களை ஒதுக்கிவைக்கும் வகையிலும் உள்ளது. இந்த சட்டம் என்பது மதசிறுபான்மையினரை கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்டது. இது இந்தியாவின் மதசார்பின்மையை உடைக்கும் வகையில் உள்ளது. மேலும் இலங்கையில் இருந்து துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் அகதிகளாக தங்கியுள்ள இந்திய வம்சாவளி தமிழர்களையும் அது ஒதுக்கி வைத்துள்ளது. இது தமிழ் இனத்துக்கு எதிரானதாக உள்ளது. இலங்கையில் இருந்து தமிழ்நாட்டில் குடியேறி பல தசாப்தங்களாக வசித்தாலும் கூட அவர்களுக்கான குடியுரிமை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சிஏஏவிலும் இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் இருந்த வந்தவர்களை அகதிகளாக வைத்து அடிப்படை உரிமை உள்ளிட்ட பிற உரிமைகளை கிடைக்காத நிலையே தொடர்கிறது. தமிழ் அகதிகள் மீதான மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் இது எடுத்து காட்டுவதோடு, அவர்களை மத்திய அரசு நாடு கடத்தும் என்ற அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் சிஏஏ பாரபட்சமானதாக உள்ளது. மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.