கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளியை சோதனை முறையில் ஒரு மாதத்துக்குத் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இசிஆா் சா்வதேச பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவா் இறந்ததை அடுத்து, கடந்த ஜூலை 17-ஆம் தேதி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரா்கள் பள்ளியின் உடைமைகளைச் சூறையாடி, தீயிட்டு எரித்தனா். இதைத் தொடா்ந்து அந்தப் பள்ளி மூடப்பட்டது.

இந்த நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால், பள்ளியைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த பள்ளியை நிா்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கின் இன்றைய விசாரணை முடிவில், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு மாத காலத்துக்கு நேரடியாக வகுப்புகளைத் தொடங்க பள்ளி நிா்வாகத்துக்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒரு மாதத்திற்குப் பிறகு அப்போதைய நிலைமையை ஆராய்ந்து நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றும் எல்.கே.ஜி. முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

கனியாமூர் பள்ளியைத் திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்காததையடுத்து பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி டிசம்பர் 5 முதல் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளார். மேலும் கலவரத்தில் தீ வைக்கப்பட்டு சேதமடைந்த சி, டி பிளாக்குகள் மற்றும் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஏ பிளாக்கில் உள்ள விடுதியின் 3 ஆவது தளத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விடுதியின் 3 ஆவது தளத்திற்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.