புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் லட்சுமி யானை மறைவுக்கு தமிழிசை இரங்கல்!

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான பெண் யானை லட்சுமி உயிரிழந்தது.

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான பெண் யானை லட்சுமி உள்ளது. இதன் வயது 32. ஐந்து வயதாக இருந்தபோது புதுச்சேரி மாநிலத்திற்கு 1988 ஆம் ஆண்டு அழைத்துவரப்பட்டது. ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் பொதுமக்கள் சாமிதரிசனம் செய்வது வழக்கம் இதேபோல் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். மணக்குள விநாயகரை தரிசனம் செய்த பின்னர் கோவில் வாயிலில் நிற்கும் யானை லட்சுமியிடம் ஆசீர்வாதம் வாங்கி செல்வர். மேலும் அனைவரிடமும் யானை லட்சுமி அன்பாக பழகும்.

வழக்கமாக லட்சுமி நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலை யானை லட்சுமி நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தபோது காமாட்சி அம்மன் கோவில் வீதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்து துடி துடிக்க உயிரிழந்தது. இதனையடுத்து யானை உயிரிழந்த இடத்திற்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கிரேன் மூலம் யானை அகற்றப்பட்டு லாரியில் வைக்கப்பட்டு உயிரிழந்த காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோவில் முன்பு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. உயிரிழந்த கோவில் யானை லட்சுமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் மலர் மற்றும் மாலைகளை கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் யானை லட்சுமி உயிரிழந்ததை அடுத்து கோவில் நடைகள் சாத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை 3 மணி அளவில் வாழைக்குளம் பகுதியில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில் நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மணக்குள விநாயகர் கோயிலில் லட்சுமி யானை தனக்கு ஆசிர்வாதம் வழங்கிய சில புகைப்படங்களை பகிரிந்து இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நமது புதுச்சேரியில் அருள்மிகு மணக்குள விநாயகரை தொழ வருபவர்களின் தோழியான லட்சுமி யானை புதன்கிழமை இல்லை என்று நினைத்து வருந்துகிறேன். மணக்குள விநாயகர் திருக்கோயிலுக்கு வருபவர்களிடம் தோழியாக, சகோதரியாக ஆசிர்வாதம் செய்தது இன்னும் மனக்கண்ணில் நிழலாடுகிறது. மணக்குள விநாயகர் தேர் வரும்போது தேர் போன்றே கம்பீரமாக அந்த பிரகாரத்தில் தேரை வழிநடத்தி செல்வாள். எங்களை எப்படி தேற்றிக் கொள்வதே என்று தெரியவில்லை. லட்சுமி யானையை இழந்து வாடும் புதுச்சேரி மக்களுக்கும், வெளியூரிலிருந்து வந்து அன்போடு அவளிடம் பழகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.