ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும்: மா.சுப்பிரமணியன்

கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று புதியதாக யூ-டியூப் சேனல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. “நலம் 365” என்ற யூ-டியூப் சேனலை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நலம் 365 எனும் யூ-டியூப் சேனலில் எந்தெந்த மருத்துவமனைகளில் என்னென்ன கட்டுமானவசதிகள் உள்ளன என்பது பற்றியும், எந்த மருத்துவமனையில் எதற்கான சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். அதேபோல் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு கிடைக்கும் நேரத்தில் மருத்துவர்கள் பதிலளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், நோய்கள் பற்றி பரவும் வதந்திகளுக்கு மருத்துவர்கள் மூலமாக விளக்கமளிக்க யூ-டியூப் சேனல் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக தொடங்கப்பட்டுள்ள நலம் 365 யூ-டியூப் சேனல் வணிக நோக்கத்திற்காக அல்லாமல், மக்களுக்கு சுகாதாரம், உணவு, உடற்பயிற்சி உள்ளிட்ட ஆலோசனைகளை வல்லுநர்கள் மூலம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. அதேபோல் பொதுமக்களின் ஆலோசனைகளையும் அறிவதற்காக சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேனலுக்கான அலுவலகம் டிபிஎஸ் வளாகத்தில் இயங்க உள்ளது. யோகா, உணவு பழக்கம், மகப்பேறு காலத்திற்கான வழிக்காட்டுதல், தடுப்பூசி வழிகாட்டுதல் என பல்வேறு விஷயங்கள் சேனல் மூலம் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ஒப்பந்த செவிலியர்களுக்கான பணி நீட்டிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் பற்றிய கேள்விக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார். 2019ம் ஆண்டில் 2,345 செவிலியர்கள் எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 2,323 பேர் பணியில் சேர்ந்தனர். அதன் பின்னர் 2020ம் ஆண்டில் விண்ணப்பித்த 5,736 பேரை பணிக்கு அழைத்ததில் 2,366 பேர் பணியில் சேர்ந்தனர். கொரோனாவை காரணம் காட்டி, அரசின் விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் செவிலியர்களை பணிக்கு சேர்த்தது அதிமுக அரசு. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற விதிமுறைகளை பின்பற்றாமல் பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல. நீதிமன்றங்களின் உத்தரவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும் ஒப்பந்த செவிலியர்களின் நன்மைக்காக, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

டெல்லிக்கு சென்று வந்த பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் 708 மொகல்ல கிளினிக்குகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். அந்தப் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. அதற்கு ஒரு மருத்துவர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு செவிலியர், ஒரு பணியாளர் நியமிக்க உள்ளோம். அதேபோல் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு இடைநிலை சுகாதார செவிலியர்கள் 770 பேர் தேவை இருக்கிறது. அதேபோல் பொது சுகாதாரத் துறையில் 2200 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தையும் 2,301 ஒப்பந்த செவிலியர்கள் நிரப்ப உள்ளனர். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களில் பணி நீட்டிப்பு வழங்கப்படாதவர்களுக்கு காலிப்பணியிடங்கள் உள்ள இடத்தில் மாற்றுப்பணி வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றியதால் மாற்றுப்பணி வழங்கப்பட உள்ளது. 14 ஆயிரம் ஊதியம் வாங்கிய நிலையில், இது ரூ.18 ஆயிரமாக உயர உள்ளது. செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். இதனை செவிலியர்கள் உணர வேண்டும். எதிர்காலத்தில் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்பு இருந்தால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, செவிலியர்கள் பணி நீட்டிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருப்பது கூத்தாக இருக்கிறது. அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில், அனைத்து துறைகளிலும் திருவிளையாடல் செய்துள்ளார். மக்கள் சுகாதாரத்துறையில் நடைபெற்ற விதிமீறலுக்கும், எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.