பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை இரண்டு தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண் போலீசிடம் அத்துமீறிய இருவரை கைது செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை சாலிகிராமம் தசரதபுரம் பஸ் நிலையம் அருகே பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் தி.மு.க. பகுதி செயலாளர் மு.ராஜா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ. உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இரவு 10 மணி அளவில் கூட்டம் முடிந்து முக்கிய பிரமுகர்கள் மேடையை விட்டு இறங்கி சென்றனர். அப்போது அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த நர்மதா என்ற பெண் போலீசிடம் தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த பிரவீன் (23), ஏகாம்பரம் (24) ஆகிய இருவரும் பாலியல் அத்துமீறலில் அநாகரீகமாக நடந்து கொண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த கேசவன் என்ற போலீஸ்காரர் அவர்களை கண்டித்து சத்தம் போட்டார். அவர்களை இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் பிடிக்க முயன்றதும் தப்பி ஓடினார்கள். உடனே போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றதும் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ. விரைந்து சென்று பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதனால் அவர்களை போலீசார் விடுவித்தனர்.
இந்த சம்பவத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை இரண்டு தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை கைது செய்ய முற்பட்ட போலீசாரிடம் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சக்கட்ட அவலம். மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது தி.மு.க.வுக்கு வாடிக்கையாக இருந்தாலும் கனிமொழி எம்.பி. கலந்துகொண்ட பொதுக்கூட்டத்திலும் இவ்வாறு தி.மு.க. நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடு. இந்த நிலையில் சீண்டலில் ஈடுபட்ட 2 தி.மு.க. நிர்வாகிகளையும் கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.