இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

கடந்த ஆறு நாட்களாகவே இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 2009இல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் மே 31ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது. அதே ஆண்டு ஜூன் 1இல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு நாள் கழித்து நியமன ஆணை வழங்கப்பட்டதால் ஊதிய வேறுபாடு சுமார் 3000 ரூபாய்க்கு மேல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர்கள் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்துக் கடந்த 2016இல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. 7-வது ஊதியக் குழுவில் 2009க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைச் சரி செய்யப் பரிந்துரைக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இருப்பினும், தமிழக அரசு தனது உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். கடந்த 27ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் 6 நாட்களாகத் தொடர்ந்தது. இந்த உண்ணாவிரத போராட்டம் காரணமாக சுமார் 140 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையே நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய நிதித்துறைச் செயலர் தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த சூழலில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள். இந்த குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதல்வரின் இந்த அறிவிப்பை ஏற்று, இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வர் இது தொடர்பாக ஆராயக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். விரைவில் இந்த விகாரத்தில் நல்ல முடிவையும் எடுப்பார் என நம்புகிறோம். கடந்த 6 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முதல்வரின் வார்த்தை நம்பி முடித்துக் கொள்கிறோம். சம வேலைக்குச் சம ஊதியம் சம வேலைக்குச் சம ஊதியம் என்பதை வலியுறுத்தித் தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். இதற்காகத் தமிழக அரசு இப்போது குழுவை அமைக்க உள்ளது. இந்த குழுவிடம் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுவோம். இன்றுடன் நாங்கள் எங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்கிறோம். நாளை முதல் வழக்கமான பணிகளுக்குத் திரும்ப உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் 6 நாட்களாகத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் இடைநிலை போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.