புத்தாண்டையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார்!

தே.மு.தி.க. அலுவலகத்தில் புத்தாண்டையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விஜயகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவிப்பது வழக்கம். அந்தவகையில் புத்தாண்டு தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு விஜயகாந்த் நேற்று காலை வந்தார். அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா, மகன்கள் சண்முகபாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோரும் வந்தனர். அப்போது திரண்டிருந்த நிர்வாகிகள்-தொண்டர்களும் விஜயகாந்தை பார்த்து ‘கேப்டன் வாழ்க.. கேப்டன் வாழ்க..’ என்று உற்சாக குரல் எழுப்பினர். விஜயகாந்தும் அதனை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். பின்னர் கட்சி அலுவலக வாசற்படிக்கு விஜயகாந்த் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அவரை சற்று தள்ளி நின்றபடி நிர்வாகிகள், தொண்டர்கள் பார்த்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொண்டர்களை பார்த்த விஜயகாந்த் தனது கையை அசைத்தும், தனது கட்டை விரலை உயர்த்தி காட்டி உற்சாகமூட்டினார். பின்னர் தன்னை சந்திக்க வந்த அனைவருக்குமே இருகரம் கூப்பி அவர் நன்றி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பறக்கும் முத்தத்தை கொடுத்தார். அதேவேளை புத்தாண்டு பரிசாக நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு தலா 100 ரூபாய் நோட்டை பிரேமலதா வழங்கினார். ஏறக்குறைய 40 நிமிடங்களுக்கு பிறகு விஜயகாந்த் அங்கிருந்து புறப்பட்டனர். புத்தாண்டையொட்டி தொண்டர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர் பார்த்தசாரதி உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். பேசுவதிலும், நடப்பதிலும் சிரமம் இருக்கிறது. இருந்தாலும் தொண்டர்களை சந்திக்க விரும்பி, அனைவருக்குமே அழைப்பு விடுத்தார். இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் விஜயகாந்த் நிச்சயம் கலந்துகொள்வார். தொண்டர்களை சந்தித்ததில் ஒரு மிகப்பெரிய எழுச்சி விஜயகாந்துக்கும், தலைவனை சந்தித்ததில் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியும் உருவாகி இருக்கிறது. தே.மு.தி.க. ஒரு அசைக்கமுடியாத சக்தி என்பதை மீண்டும் தொண்டர்கள் நிரூபித்து இருக்கிறார்கள். டெல்லியில் தேர்தல் ஆணையம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் தே.மு.தி.க. நிச்சயம் பங்கேற்கும். கட்சியின் உள்கட்சி தேர்தல் விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்ட அறிவிப்பை விஜயகாந்த் அறிவிப்பார். தே.மு.தி.க.வின் தலைவர் எப்போதுமே விஜயகாந்த்தான்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மதுவிலக்கு, ‘நீட்’ ஒழிப்பு, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதி உதவி என பல வாக்குறுதிகளை தி.மு.க. அள்ளி வீசியது. ஆனால் எதுவுமே நடைபெறவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, வந்ததற்கு பிறகு ஒரு நிலைப்பாடு என தி.மு.க. இருக்கிறது. இதுதான் திராவிட மாடலா? என மக்கள் கேட்கிறார்கள். மக்கள் இதனை ஏற்கவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. எனவே உரிய நேரத்தில் கட்சியின் நிலைப்பாட்டை விஜயகாந்த் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.