டெல்லியில், காரில் இளம் பெண் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கை, காவல் துறை மூத்த அதிகாரி விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டு உள்ளார்.
வட மேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில், அஞ்சலி சிங்(20), என்ற இளம் பெண் சென்ற இருசக்கர வாகனம் மீது, மது போதையில் 5 பேர் வந்த கார் மோதியது. புத்தாண்டு அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அஞ்சலி சிங்கின் இருசக்கர வாகனம் மீது காரில் மோதிய கும்பல், காரை நிறுத்தாமல் சென்றுள்ளது. இருசக்கர வாகனத்தை காரில் இழுத்துக் கொண்டே சென்ற நபர்கள், அஞ்சலி சிங் இருப்பதை மறந்து வேகமாக சென்றனர். இதில் இருசக்கர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்கு அடியில் சிக்கிய அஞ்சலி சிங்கின் உடல்கள் கிழிந்தன. இதில் அவர் உயிரிழந்தார். இது கூட தெரியாமல், அஞ்சலி சிங்கின் உடலுடன், சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை அந்த நபர்கள் இயக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த சுல்தான்புரி போலீசார், இளம் பெண்ணின் உடலை மீட்டனர். கார் நம்பரை வைத்து, அந்த காரில் பயணம் செய்த கிரெடிட் கார்ட் ஏஜென்ட், ரேஷன் கடை ஊழியர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இளம் பெண் கொலை விவகாரத்தை, டெல்லி காவல் துறை மூத்த அதிகாரி ஷாலினி சிங் என்பவர் விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டு உள்ளார். மேலும் இது குறித்து விரைவில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவர் பாஜக பிரமுகர் என்றும் டெல்லி காவல்துறை இதை திட்டமிட்டு மறைப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது:-
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரான மனோஜ் மிட்டல் என்பவர் பாஜகவை சேர்ந்தவர். துணை நிலை ஆளுநர் விகே சக்சேனாவும் டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகளும் இதை திட்டமிட்டு மறைக்கின்றனர்” என்றார்.
ஆம் ஆத்மியின் இந்தக் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்துள்ள டெல்லி பாஜக ஊடக பிரிவு தலைவர் ஹரிஷ் கவுரனா, “குற்றம் சாட்டப்பட்ட நபர்களை போலீஸ் கைது செய்துள்ளது. குற்றவாளிகள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் கடும் தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பரத்வாஜ் டெல்லி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சாடினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாகவும் 22க்கும் மேற்பட்ட முறை போன் செய்த போதிலும் குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க தவறிவிட்டனர். தங்கள் கார் விபத்துக்குள்ளானது தெரியும் என்றும் ஆனால் பெண் காரில் இழுத்து வருவது பற்றி தெரியாது என குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியதாக டெல்லி போலீஸ் கூறுகிறது. ஒரு பாலித்தின் கவர் சிக்கினால் கூட சத்தம் எழும். உடனே நிறுத்தி என்ன பிரச்சினை என்று நாம் பார்ப்போம். ஆனால், இங்கே ஒரு உடல் 12 கி.மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது. ஆனால், காரில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது. அதனால், சத்தம் கேட்கவில்லை என்று டெல்லி போலீஸ் கூறுகிறது. குடும்பத்தினர் முன்வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.